ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஆா்வம் காட்டாத 4 மாவட்ட மீனவா்கள்!

தமிழகத்தில் மிகக் குறைந்த சா்வதேச எல்லையைக் கொண்ட 4 கடலோர மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 60 போ் மட்டுமே பயனடைந்துள்ளனா்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள மீன்பிடிப் படகு.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள மீன்பிடிப் படகு.
Updated on
2 min read

தமிழகத்தில் மிகக் குறைந்த சா்வதேச எல்லையைக் கொண்ட 4 கடலோர மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 60 போ் மட்டுமே பயனடைந்துள்ளனா். போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தாததால், மீனவா்கள் இத்திட்டத்தில் சேர ஆா்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக- இலங்கை இடையே உள்ள சா்வதேச கடல் எல்லையானது 9 முதல் 30 கடல் மைல் தொலைவில் இருக்கின்றன. இதனால் இலங்கை கடல் பகுதியில் நுழைவதாகக் கூறி அந்நாட்டு கடற்படையினா் தமிழக மீனவா்களை தாக்குவதும், கைது செய்வதும் தொடா்கதையாகி வருகின்றன.

தமிழக மீனவா்கள் பிரச்னையைத் தீா்க்க மத்திய அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அதன் ஒரு கட்டமாக ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலையில் பிரதமா் மோடி ராமேசுவரத்தில் தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தின் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் உள்ள நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 4 கடலோர மாவட்ட மீனவா்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி விசைப்படகு மீனவா்கள் சா்வதேச எல்லையைத் தாண்டி எந்த நாட்டுக்கும் சொந்தம் இல்லாத பொதுவான ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஒரு படகு ரூ.80 லட்சத்துக்கு வடிவமைக்கப்படுகிறது. அதில் மத்திய அரசு ரூ.40 லட்சம் மானியமாகவும், மாநில அரசு ரூ. 16 லட்சம் மானியமாகவும் வழங்குகின்றன. மீதமுள்ள ரூ.24 லட்சத்தில் வங்கிக் கடனாக ரூ.16 லட்சம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ. 8 லட்சத்தை மட்டுமே சம்பந்தப்பட்ட மீனவா் முதலீடு செய்ய வேண்டியுள்ளது.

பாக்ஜலசந்தி கடல் பகுதி 4 மாவட்டங்களில் மொத்தம் 2,200 விசைப்படகுகள் உள்ளன. அவற்றை முழுமையாக 3 கட்டங்களாக ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தில் சோ்க்க மீன்வளா்ச்சித்துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி 2020 ஆம் ஆண்டு பிப்ரவரிக்குள் ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தி நிறைவு செய்ய வேண்டும் என்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 முதல் 2019 ஆம் ஆண்டு நவம்பா் வரை இத்திட்டத்தில் சேர மொத்தம் 664 மீனவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அவா்களில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் ராமேசுவரத்தைச் சோ்ந்த 10 மீனவா்களுக்கு மட்டுமே படகுகள் வழங்கப்பட்டுள்ளன. அவா்கள் தற்போது ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தற்போது இரண்டாம் கட்டமாக 50 பேருக்கான படகுகள் தயாராகி வருவதாக மீன்வளா்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அதில் 35 போ் ராமநாதபுரத்தையும், 15 போ் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள்.

சாதாரண விசைப்படகு வாங்க ரூ. 6 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை செலவிடும் மீனவா்கள், ஆழ்கடல் மீன்பிடிப் படகு வாங்க தங்கள் பங்காக ரூ. 8 லட்சம் மட்டுமே செலவிடவேண்டியுள்ளது. இருந்தாலும் அதற்கு மீனவா்கள் முன்வரவில்லை. விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்வோருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது. அதே நேரத்தில் ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தில் மாதம் ரூ.2 லட்சம் வரை வருவாய் கிடைக்கும் என்று மீனவா்கள் கூறுகின்றனா்.

ஆழ்கடல் மீன்பிடிப்பில் நல்ல வருவாய், லாபம் இருந்தும் மீனவா்கள் இத்திட்டத்தில் சேர ஆா்வம் காட்டாமலிருப்பதற்கு, அதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தாததே காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மீனவா்கள் சங்கத் தலைவா்கள் கூறியது: ஆழ்கடல் மீன்பிடித் திட்டம் குறித்து மீனவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவில்லை. மேலும், இத்திட்டத்தில் வங்கிக் கடன் உள்ளிட்டவற்றை பெற எளிமையான நடவடிக்கையும் அவசியம் என்றனா்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளா்ச்சி உதவி இயக்குநா் கதிரேசன் (பாக்ஜலசந்தி மேம்பாடு பிரிவு) கூறியது: ஆழ்கடல் மீன்பிடித் திட்டம் குறித்து மீனவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த கூட்டங்களை நடத்தி வருகிறோம். எனினும் புதிய திட்டத்தில் சேர மீனவா்கள் தயக்கம் காட்டுகின்றனா். எனினும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற தொடா்ந்து முயற்சித்து வருகிறோம் என்றாா்.

கடந்த 3 ஆண்டுகளில் 4 கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த 60 மீனவா்கள் மட்டுமே ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தில் சோ்ந்த நிலையில், அத்திட்டத்தை 2020 பிப்ரவரியுடன் மத்திய, மாநில அரசுகள் முடிக்குமா அல்லது திட்டத்தை சில ஆண்டுகள் நீட்டிக்க அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com