நாகூர் சில்லடி தர்கா 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
நாகூர் ஆண்டவர் 40 நாள்கள் தவமிருந்த புனித இடமான நாகூர் கடற்கரையில் சில்லடி தர்கா நிறுவப்பட்டுள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டில் நடைபெறும் 462- ஆவது ஆண்டு கந்தூரி விழா செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து, கடந்த 10 நாள்களாக சில்லடி தர்காவில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தையொட்டி மாலை 6.30 மணியளவில் நாகூர் தர்கா பரம்பரை கலீபா மஸ்தான் சாகிபு காதிரி தலைமையில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. பின்னர் இரவு 9.30 மணியளவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. நாகூர் தர்காஅலங்கார வாசலிலிருந்து புறப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சில்லடி தர்காவை வந்தடைந்தது.
தொடர்ந்து நடைபெற்ற தொழுகைக்குப் பின்னர் சந்தனம் பூசப்பட்டது. இதில், திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, நாகூர் தர்கா நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.