
காவலர்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்க உயர் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் காவல் ஆணையர் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது, காவல் ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
காவலர்களின் நலன் மற்றும் குறைதீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவும், காவல் ஆணையம் அமைக்கக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலங்களில் காவல்துறையினருக்கான சீர்திருத்த ஆணையத்தை அமைப்பது தொடர்பான தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது
அதன்படி, இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத்கோத்தாரி மற்றும் நீதிபதி சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி சார்பில் தற்போது தமிழகத்தில் காவல் சீர்திருத்தச் சட்டத்தின் பிரகாரம் 4-வது காவல் ஆணையம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘காவலர்களின் குறைகளைக் களையவும், அவர்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கவும் காவல் ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அதற்காக உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
எனவே இதுதொடர்பாக தமிழக அரசு உரிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் வரும் டிச.18 அன்று நேரில் ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்துள்ளனர்.
தமிழக அரசு நான்காவது காவல் ஆணையத்தை அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பிரியா நான்காவது காவல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆணையத்தின் உறுப்பினர்களாக வேடசந்தூர் எம்எல்ஏ பரமசிவம், முன்னாள் இணைச் செயலாளர் அறச்செல்வி, ஏடிஜிபி வெங்கட்ராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி காலத்தில் 1969, 1989 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி மூன்று காவல் ஆணையங்களை அமைத்திருந்தார். தற்போது முதன் முறையாக அதிமுக ஆட்சிக்காலத்தில் நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.