பேச்சுவார்த்தையில் முல்லைப் பெரியாறு அணையின் 2-ஆவது சுரங்கப் பாதை திட்டம்: 5 மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு

தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையிலான நதிநீர் பங்கீடு தொடர்பான உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தையின்போது, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொண்டு
பேச்சுவார்த்தையில் முல்லைப் பெரியாறு அணையின் 2-ஆவது சுரங்கப் பாதை திட்டம்: 5 மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு

மதுரை: தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையிலான நதிநீர் பங்கீடு தொடர்பான உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தையின்போது, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர 2-ஆவது சுரங்கப் பாதை அமைப்பது குறித்தும் பேச்சு நடத்தி தீர்வுகாண வேண்டும் என்பது 5 மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்விரு மாநிலங்களுக்கும் இடையிலான நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, கடந்த மாதம் 25 ஆம் தேதி திருவனந்தபுரம் சென்று அங்கு கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அப்போது, பரம்பிக்குளம்-ஆழியாறு மற்றும் பாண்டியாறு-புன்னம்புழா ஆறு நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்த இரு மாநிலங்களின் உயர் அதிகாரிகளைக் கொண்ட 2 குழுக்களை அமைக்கவும், அந்த குழுவானது ஆண்டுக்கு 2 முறை கூடி இரு மாநிலங்களுக்கும் இடையிலான நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி, குழுவுக்கான தமிழக அரசு  அதிகாரிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்துவதற்கு ஏதுவாக பேபி அணையை பலப்படுத்த அங்குள்ள 23 மரங்களை வெட்டி அப்புறப்படுத்த அனுமதி அளிக்கவும் கேரள முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு விண்ணப்பம்

முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்திக் கொள்ள உச்சநீதிமன்றம் கடந்த 2014  ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்பு அளித்தது. ஐந்து ஆண்டுகள் ஆகியும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அணையை பலப்படுத்தும் பணிக்கு ஒத்துழைப்பு  அளிக்குமாறு தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்தும் கேரள அரசு செவிசாய்க்கவில்லை.

அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெற தமிழக பொதுப்பணித் துறையினர் இணையம் மூலம் விண்ணப்பித்துள்ளதாகவும், அதற்கு இதுவரையில் பதில் இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கேரளத்துக்கு சென்ற தமிழக முதல்வர், பேபி அணைப் பகுதியில் உள்ள 23 மரங்களை வெட்ட அப்புறப்படுத்த அனுமதி கேட்டுள்ளார். எனினும்,  புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரண்டாவது சுரங்கப் பாதை அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ள யோசனை குறித்து முதல்வர் பேசியதாக தகவல் இல்லை.

இரண்டாவது சுரங்கப் பாதை

1979 ஆகஸ்ட் 11 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்வி அணை உடைந்து சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். உடனே, பெரியாறு அணையானது,  நில அதிர்வுக்கு இலக்காகும் பகுதியில் அமைந்துள்ளதாக கூறி அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீர்மட்டத்தை குறைக்க கேரள அரசு வலியுறுத்தியது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகளின் பரிந்துரையின்படி அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 142.2 அடிக்கும், பிறகு 136 அடிக்கும் குறைக்கப்பட்டது. பிறகு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், நீண்ட சட்ட போராட்டத்துக்கு பிறகு அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

தீர்ப்பில், அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை பழையபடி 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளவும் தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. மேலும், முல்லைப் பெரியாறு அணையை செயலிழக்கச் செய்துவிட்டு புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், அதற்கு மாற்று யோசனையாக இரண்டாவது சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்தை பரிந்துரை செய்தது.

ஓராண்டில் முடிக்க ஆலோசனை

தற்போது அணையின் 106.5 ஆவது அடி  உயரத்தில் உள்ள சுரங்கப் பாதை வழியாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர்எடுக்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை  12 அடி அகலமும், 7.5 அடி உயரமும் கொண்டது. பருவ மழைக் காலங்களில் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயரும்போது தண்ணீரை விரைவாகவும், அதிகமாகவும் வெளியேற்ற இந்த சுரங்கப் பாதை போதுமானது அல்ல.  எனவே, அணையின் நீர்மட்டம் உயரும்போது பாதிப்பு ஏற்படலாம் என்ற கேரள அரசின் அச்சத்தை தவிர்க்கவும், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், நிலஅளவை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து இரண்டாவது சுரங்கப் பாதை ஒன்றை அமைக்கலாம். அந்த சுரங்கப் பாதை அணையின் 50 ஆவது அடியில் அமையுமானால்,  அணையிலிருந்து அதிகமான தண்ணீரை வெளியேற்ற முடியும் என்பதோடு அந்த தண்ணீரால் தமிழகம் கூடுதலாக பயன் பெற முடியும். எனவே, அதற்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும். இது, புதிய அணை கட்டுவதற்கான செலவை ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கலாம். அதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணியை தமிழக அரசு ஓராண்டு காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு சாதகமான  இந்த தீர்ப்பு குறித்து சில ஊடகங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் தமிழக அரசு இதில் கவனம் செலுத்தாதது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கேரளத்தில் பெய்த பலத்த மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறித்து கேரள அரசு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையே காரணம்காட்டி இரண்டாவது சுரங்கப்பாதை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். அதுவும் நடைபெறவில்லை. அணையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையில் பல்வேறு "தந்திரங்கள்' உண்டு. புதிய அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கேள்விக் குறியாகி விடலாம். எனவே, இரண்டாவது சுரங்கப் பாதை என்பது தமிழ்நாட்டுக்கு ஓர் வரப்பிரசாதம் ஆகும்.

5 மாவட்டங்களின் வாழ்வாதாரம்

இந்த அணையின் மூலம்,  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்த அணையின் நீரானது, சுமார் 6.8 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமின்றி சுமார் 80 லட்சம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.  இந்த அணை நீரை பயன்படுத்துவதில் கடந்த 1979 வரை எந்தப் பிரச்னையும் இல்லை. அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்ட பிறகுதான் பிரச்னை ஏற்பட்டது.
எனவே, அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 152 அடிக்கு உயர்த்த விரைவாக நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி, இரு மாநில உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தையின்போது இரண்டாவது சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்துக்கு தீர்வு காணவும் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com