இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்காக தமிழக அரசு நிதிச் சுமையை ஏற்பதா?: கே.எஸ்.அழகிரி கேள்வி

இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்காக தமிழக அரசு நிதிச் சுமையை ஏற்பதா? என்று 'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். 
காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி
Published on
Updated on
2 min read

சென்னை: இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்காக தமிழக அரசு நிதிச் சுமையை ஏற்பதா? என்று 'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அதிகார குவியலை நோக்கி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஒற்றை ஆட்சி முறையை அமல்படுத்துவதற்கு பல்வேறு உத்திகளை பா.ஜ.க. கையாண்டு வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டிப் புதைக்கிற நடவடிக்கைகளை எடுத்து வரும் பா.ஜ.க. அரசு ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முடிவெடுத்திருக்கிறது. இதன்படி வருகிற ஜூன் 1, 2020 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டையை அமல்படுத்த திட்டம் தீட்டி வருகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் இத்தகைய குடும்ப அட்டைகள் மூலம் எந்த மாநிலத்திலும் நியாய விலைக் கடைகள் மூலம் உணவு பொருட்களை பெற முடியும். தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் மார்ச் 2020 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். இதைவிட மாநில உரிமைகளை பறிக்கிற மத்திய அரசுக்கு துணைபோகிற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. பொது விநியோக கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு அ.இ.அ.தி.மு.க. அரசு துணை போயிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதற்கான காரணத்தை மத்திய உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறுவது மிகுந்த வியப்பையும், ஆச்சரியத்தையும் தருகிறது. நாடு முழுவதும் நான்கரை கோடி மக்கள் பல்வேறு மாநிலங்களில் வேலை வாய்ப்புக்காக தற்காலிகமாக தங்கியிருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த மாநிலங்களில் குடும்ப அட்டையை பயன்படுத்துவதற்கு இயலாத நிலையில் உள்ளதாகவும், அவர்களும் இந்த குடும்ப அட்டையை பயன்படுத்துகிற வகையில் தான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.

தற்காலிகமாக பல மாநிலங்களில் குடி பெயர்ந்த நான்கரை கோடி தொழிலாளர்களுக்காக நாடு முழுவதும் உள்ள 23 கோடி குடும்ப அட்டைதாரர்களை பாதிக்கிற வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த முனைந்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது. வேறு மாநிலங்களில் இருந்து வேலை வாய்ப்பிற்காக தற்காலிகமாக வருபவர்கள் குறித்து எந்த உறுதியான புள்ளி விவரமும் இல்லாத நிலையில், எந்த மாநிலத்தில் தங்கியிருக்கிறார்களோ, அங்குள்ள நியாய விலைக் கடைகளில் உணவு பொருட்களை மலிவு விலையில் வழங்குவது என்பது பல்வேறு நடைமுறை சிக்கல்களை உருவாக்கும். பெரும்பாலும் குடி பெயர்ந்தவர்கள் தனியாக இருப்பார்களே தவிர, குடும்பமாக இருப்பதில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து குடும்ப அட்டைகளும் மின்னணு மயமாக்கப்பட்டிருந்தாலும், கிராமப்புறங்களில்  தொழில்நுட்ப கோளாறுகளினாலும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம் காண உரிய ஆவனங்கள் இல்லாத நிலையிலும் பல்வேறு சிக்கல்கள் எழுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்தப் பின்னணியில் நடைமுறை சாத்தியமில்லாத இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசு எந்த அடிப்படையில் ஒப்புதல் தந்தது என்று தெரியவில்லை. வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலமாக உணவு பொருட்கள் வழங்கும் போது அந்த நிதிச் சுமையை யார் ஏற்றுக் கொள்வது ? தமிழக அரசு ஏற்றுக் கொள்ளுமா ? இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு நிதிச் சுமையை ஏற்பதை எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும் ?

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்கிற பா.ஜ.க. அரசின் திட்டத்திலிருந்து உடனடியாக தமிழக அரசு விலக வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அப்படி விலகுவதற்கு துணிவில்லாமல் பா.ஜ.க. அரசின் கூட்டாட்சி விரோத நடவடிக்கைகளை நிறைவேற்ற அ.இ.அ.தி.மு.க. அரசு தொடர்ந்து துணை புரியுமானால் அதை எதிர்த்து மாபெரும் மக்கள் இயக்கம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com