போக்குவரத்து விதிமீறல்களால் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசு

போக்குவரத்து விதிமீறல்களால் ஏற்படும் ஒலி, ஒளி, காற்று மாசு காரணமாக மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்
போக்குவரத்து விதிமீறல்களால் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசு
Updated on
2 min read

திண்டுக்கல்:  போக்குவரத்து விதிமீறல்களால் ஏற்படும் ஒலி, ஒளி, காற்று மாசு காரணமாக மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2019 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வாகனங்களுக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணம் மற்றும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை, தலைக்கவசத்திற்கான முக்கியத்துவம் வாகன ஓட்டிகளின் பிற விதிமீறல்களுக்கு அளிக்கப்படுவதில்லை. 

குறிப்பாக, அதிக ஒலி எழுப்பியும், அதிக ஒளியை உமிழ்ந்தும் பிற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பொதுமக்களிடையே ஒளி மற்றும் ஒலி மாசு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், இதனை ஒரு விதிமீறலாக யாரும் கருதுவதில்லை.

ஒளி, ஒலி மாசு: கடந்த 2 ஆண்டுகளாக புதிதாக விற்பனைக்கு வரும் இருசக்கர வாகனங்கள், சாவியை பொருத்திய உடனே எல்.இ.டி. முகப்பு விளக்கு எரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதனைப் பின்பற்றி, பழைய இருசக்கர வாகனங்களிலும் எல்இடி விளக்குகள் முகப்பு விளக்குகளாக பொருத்தப்படுகின்றன. மேலும், வாகனத்தின் முன்பகுதியில் 3, 4 என விருப்பத்திற்கு ஏற்ப "எல்இடி' விளக்குகள் பொருத்தப்படுகின்றன. அதேபோல் முகப்பு விளக்குகளின் மேல் கருப்புவில்லை ஒட்டும் நடைமுறை முற்றிலுமாக கைவிடப்பட்டுவிள்ளது.

இருசக்கர வாகனங்களில் அதிக விளக்குகள் பொருத்துவது குறித்து காவல் துறையோ, வட்டார போக்குவரத்து அலுவலர்களோ கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவு, தற்போது ஆட்டோ, சிறிய ரக சரக்கு வாகனம் போன்றவற்றிலும் அதிக ஒளி பரப்பும் 3-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படுகின்றன. நகரின் மையப் பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான விளக்குகளுடன் ஒளியை பரப்பிச் செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு கூச்சத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கண்ணாடி அணிந்து செல்லும் பார்வைத் திறன் குறைபாடுடையவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதேபோல், இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஒலிப்பான்கள்(ஹாரன்), அதிக ஒலி எழுப்புவதாகவும், மிருகங்களைப் போல் ஒலி எழுப்புவதாகவும் இருக்கின்றன. திடீரென ஒலிக்கப்படும் இந்த வகை ஒலிப்பான்கள், குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மேலும், சில இளைஞர்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களின் இரைச்சல், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பாதசாரிகளுக்கும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.

வாகனப் பதிவு எண்கள் எழுதுவதில் விதிமீறல்: வாகனங்களின் எண்கள், இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்து என வாகனத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட அளவீடுகளில் எழுதப்பட வேண்டும் என்பது போக்குவரத்து விதி. அதன்படி இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் எண் பலகை 200  ஷ் 100 மி.மீட்டரும், இலகுரக வாகனங்களில் 340 ஷ் 200 மி.மீ., அல்லது 500  ஷ் 120 மீ.மீட்டரும், கனரக வாகனங்களில் 340  ஷ் 200 மீ.மீட்டரும் இருக்க வேண்டும். 
அதேபோல் வாகனங்களுக்கு ஏற்ப, 15 மி.மீ., உயரம், 2.5 மி.மீ., தடிமன், 2.5 மி.மீ., இடைவெளி  முதல் 65 மி.மீ., உயரம், 10 மி.மீ., தடிமன், 10 மி.மீ., இடைவெளியில் பதிவு எண்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 4 எண்கள் இடம் பெற வேண்டிய பலகையில், முதல் 2 இலக்கங்கள் பூஜ்ஜியமாக இருந்தால், அதனை பெரும்பாலானவர்கள் எழுதுவதில்லை. மேலும் தமிழ் எழுத்துக்களையும் சிலர் பயன்படுத்துகின்றனர். 

இதுபோன்ற காரணங்களால், விபத்து ஏற்படுத்தும் வாகனங்களின் எண்களைத் துரிதமாகக் கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.  கடந்த  சில நாள்களுக்கு முன்பு கூட மதுரை மாவட்டம் திருமங்கலம் சுங்கச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களின் வாகனத்தில் தமிழ் எண்கள் இடம் பெற்றிருந்ததால், அந்த வாகனத்தை எளிதாக அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. ஒலி, ஒளி மாசு, பதிவு எண் விதிமீறல், அதிக அளவு புகை வெளியேற்றி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துதல் என பல்வேறு விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வு காண வேண்டிய வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து காவல் துறையினர், இதற்கான ஆய்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஃபெட்ரிக் ஏங்கல்ஸ் கூறியது:

மோட்டார் வாகனச் சட்டப்படி 2 முகப்பு விளக்குகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சொகுசுப் பேருந்து, தனியார் பயணிகள் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மட்டுமின்றி மோட்டார் சைக்கிள்கள் வரையிலும் 4-க்கும் மேற்பட்ட விளக்குகள் பொருத்தப்படுகின்றன. முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லை ஓட்டுவது என்பது, சாலை பாதுகாப்பு வார விழா நடைபெறும் போது மட்டுமே ஓட்டப்படும் நிகழ்வாக மாறிவிட்டது. காற்று ஒலிப்பான் தடை செய்யப்பட்டு பல ஆண்டுகளாகியும், தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கனரக வாகனங்களில் புகை பரிசோதனை முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. அதனை வட்டார போக்குவரத்து அலுவலர்களும் கண்காணிப்பதில்லை. காருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டிய ஒலிப்பான்கள், இருசக்கர வாகனங்களில் பொருத்தப்படுகின்றன. இதுபோன்ற விதிமீறல்களால் மறைமுகமாக சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com