
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் விளக்கம் அளிக்க விஷாலுக்கு, எழும்பூர் நீதிமன்றம் 2 வாரம் காலஅவகாசம் வழங்கி உள்ளது.
சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிறுவனம் பல்வேறு நபர்களுக்கு வழங்கிய சம்பளத்துக்கு வரி பிடித்தம் செய்துள்ளது. அவ்வாறு பிடித்தம் செய்த வரித்தொகையை நிறுவனத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் வருமான வரித்துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தவில்லை எனக் கூறி விஷாலிடம் விளக்கம் கேட்டு, வருமான வரித்துறை அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர் மீது வருமான வரித்துறை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் சமாதானமாக செல்கிறீர்களா? அல்லது வழக்கை தொடர்ந்து நடத்துகிறீர்களா? என்று விஷாலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், இதுதொடர்பாக தனது விளக்கத்தை தெரிவிக்க விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சமாதானமாக செல்வது குறித்த விளக்கத்தைத் தெரிவிக்க மேலும் 2 வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று விஷால் தரப்பில் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.