சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றம்

பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியான இளம்பெண் சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றம்
Published on
Updated on
2 min read


சென்னை: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியான இளம்பெண் சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், விதிமீறல் பேனர்கள் குறித்த உத்தரவு சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து தலைமைச் செயலாளர் கண்காணிக்க வேண்டும் என்றும், மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கண்ட உத்தரவை அடுத்து வழக்கு விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சட்டவிரோத பேனர் வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரபாகர் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர், சென்னை மாநகராட்சி ஆணையர், சுபஸ்ரீ மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை ஆய்வாளரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.

மேலும், தமிழகத்தில் தற்போதைக்கு விவாகரத்துக்கு மட்டுமே பேனர் வைக்கப்படுவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்தும் தெரிவித்திருந்தனர்.

விதிமீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வழக்குப் பதிவு செய்ய ஏன் இவ்வளவு கால தாமதம்

மேலும், நேற்று பிற்பகல் 2.30க்கு விபத்து நேரிட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான புகார் மாலை 6 மணிக்குதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 ஆண்டுகாலம் காவல்துறைப் பணியில் இருக்கும் ஒரு ஆய்வாளருக்கு வழக்குப் பதிவு செய்ய ஏன் இவ்வளவு காலதாமதம் ஆனது, அதுவும் தந்தை அளித்த புகாரில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை குறிப்பேட்டில் பேனர் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லையே ஏன்? விபத்து நடந்த இடத்தில் 4 பேனர்கள் இருந்துள்ளன என்று நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பினர்.

சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் தொடர்பாக புகாரில் ஒரு வார்த்தை கூட பதிவு செய்யப்படாதது ஏன்? என்ற கேள்விக்கு, புகார் பதிவு செய்யும் போது பேனர் தொடர்பான விஷயத்தை மறந்துவிட்டதாக காவல் ஆய்வாளர் பதில் அளித்தார்.

ஏற்கனவே அரசியல் கட்சிகள் பேனர்களை வைக்க தடை அமலில் உள்ளது. அந்த விதிப்படிதானே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது? என்று நீதிபதிகள் கேட்டனர்.

சிசிடிவி கேமரா மூலம் இதுபோன்ற பேனர் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியாதா? யாரோ நம்மை கவனிக்கிறார்கள் என்று உணர்ந்தாலே தவறுகள் குறைந்துவிடும். பேனர் தொடர்பாக பிரச்னைகள் வரும் போதெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள்? என்றும் நீதிபதிகள் சரமாரியக் கேட்டனர்.

சுபஸ்ரீ குடும்பத்துக்கு எவ்வளவு நஷ்ட ஈடு வழங்கப் போகிறீர்கள். சுபஸ்ரீ குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகாரிகளிடம் இருந்தும், பேனர் வைத்தவர்களிடம் இருந்தும் வசூலியுங்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com