மக்களுக்கு இடையூறாக பேனர் வைப்பதை தொண்டர்கள் நிறுத்த வேண்டும்: அதிமுக 

விளம்பரம் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறாக பேனர் வைப்பதை அதிமுக தொண்டர்கள் நிறுத்த வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளனர்.
மக்களுக்கு இடையூறாக பேனர் வைப்பதை தொண்டர்கள் நிறுத்த வேண்டும்: அதிமுக 
Published on
Updated on
1 min read

விளம்பரம் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறாக பேனர் வைப்பதை அதிமுக தொண்டர்கள் நிறுத்த வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
``அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’’ தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காகத் தொண்டாற்றுவதற்காகவே தோன்றிய மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் மனம் அறிந்து, தேவையை உணர்ந்து மக்களுக்காகப் பணியாற்றுவது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளின் தலையாய கடமையாக இருந்திடல் வேண்டும். 

இந்தக் கருத்தினை கட்டளையாகவும், வேண்டுகோளாகவும் பல நேரங்களில் கழக உடன்பிறப்புகளுக்கு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா நினைவூட்டி வந்திருக்கின்றார்கள். அம்மாவின் வழியில், அம்மாவின் நல்லாசியோடு அரசியல் பணியாற்றி வரும் நாங்களும் இந்த வேண்டுகோளை கழக உடன்பிறப்புகளிடம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிகழ்ச்சிகளுக்கோ, கழகத்தினர் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ வரவேற்பு என்ற பெயரிலும், விளம்பரம் என்ற முறையிலும் மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை அன்புகூர்ந்து நிறுத்திவிட வேண்டும் என்று கழக உடன்பிறப்புகள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் கழகத்தினர் ஈடுபடவே கூடாது. ஒருசிலர் ஆர்வம் மிகுதியாலும், விளைவுகளை அறியாமலும், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை அறியாமலும் செய்கின்ற சில செயல்களால், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற செய்தி வரும் போது நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம்.

எனவே, எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்அவுட்டுகள், ஃபிளக்ஸ் போர்டுகள் (பேனர்) வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும்; கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை பள்ளிக்கரணையில் நேற்று பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியான விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விதிகளை மீறி பேனர்கள் வைக்கமாட்டோம் என முதல்வர் அறிக்கை வெளியிடலாமே? என்று கேள்வி எழுப்பியது. இதனைத்தொடர்ந்து, அதிமுக சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com