இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம்:  மீண்டும் கமல் சூளுரை 

எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார்; ஆனால் இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்று மீண்டும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மநீம தலைவர் கமல்ஹாசன்
மநீம தலைவர் கமல்ஹாசன்

சென்னை: எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார்; ஆனால் இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்று மீண்டும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு எதிராக இரண்டாவது மொழிப் போராட்டம் நடத்தப்படும் என்று தீவிரமாக விமர்சித்திருந்தார்.

அதேசமயம் நாடு குடியரசான போது அரசு செய்து கொடுத்த சத்தியத்தை எந்த 'ஷா’வோ மாற்ற முயற்சிக்க கூடாது என்று அமித் ஷாவின் கருத்திற்கு மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றின் மூலம் விமர்சித்திருந்தார்.

இந்த கருத்துகளுக்கு எதிர்வினையாக கமலும் ஸ்டாலினும் ஹிந்தி எதிர்ப்பு என்று ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பாஜக மூத்த தலைவரான சுப்பிரமண்ய சுவாமி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இது குறித்தும்,  5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மற்றும் தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் என்ற பொன் ராதாகிருஷ்ணனின் கருத்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, திங்கள் மாலை சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கமலிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

ஏற்கனவே கூறப்பட்ட விஷங்களையே நான் ஒரு விடியோவாக வெளியிட்டேன். எத்தனை  மொழிகளை வேண்டுமானாலும் நாம் ஏற்கத் தயார்; இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம்

தமிழர்களுக்கு கவலை தரும் விஷயங்கள் குறித்து முதலில் விவாதிப்போம். சுப்பிரமண்யன் சாமி குறித்து பிறகு பேசலாம். 

பொதுத்தேர்வால் படிப்பைப் பாதியில் விட்டவர்கள் ஏராளம். மீண்டும் அது போன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது. அரசியல் கட்சியை விட மாணவர்களிடம் கேட்டால் இதற்கான விளக்கம் கிடைத்துவிடும்

பொன்.ராதாகிருஷ்ணன் ஒருவேளை மொழி மாறிவிட்டார் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் பதிலளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com