கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் தனியார் திருமணத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பாக, அந்தக் கோயிலின் பொது தீட்சிதர்களிடம் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.
இந்தக் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தொழிலதிபரின் குடும்ப திருமணம் அண்மையில் விமரிசையாக நடைபெற்றது. கோயில் மரபை மீறி ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதி வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, திருமணத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பாக கோயில் தீட்சிதரான பட்டு தீட்சிதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயனிடம் பாஜக மாநில இளைஞர் அணி பொருளாளர் கோபிநாத் கணேசன் புகார் அளித்தார். இதையடுத்து, டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன், காவல் ஆய்வாளர் சி.முருகேசன் ஆகியோர் பொது தீட்சிதர்களை சிதம்பரம் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். பொது தீட்சிதர்கள் பாஸ்கர் தீட்சிதர், பட்டு தீட்சிதர், நவமணி தீட்சிதர், புகார்தாரர் கோபிநாத் கணேசன் உள்ளிட்டோர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.
பின்னர் தீட்சிதர்கள் கூறியதாவது:
நடராஜர் கோயில் வரலாற்றில் மிகப் பெரிய தவறு நடந்துள்ளது. அதற்கு நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காது என்றனர்.
பின்னர் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன் கூறியதாவது:
திருமணம் தொடர்பாக வருகிற 23-ஆம் தேதி இரு வீட்டாரையும் அழைத்து விசாரணை நடத்த உள்ளோம். அதன்பிறகே இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.