சமீபகாலமாக இந்திய மக்களின் ஒற்றுமைக்கு உலை வைக்கிற வகையில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேசி வருகிறார். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி மட்டுமே என்று பேசி இந்தி பேசாத மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார். அவரது நோக்கம் நிறைவேறுகிறதோ, இல்லையோ, இந்தி பேசும் மக்களை மொழியின் அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்ட முயற்சிக்கிறார். கடந்த 70 ஆண்டு அனுபவத்தில் பல கட்சி ஜனநாயகம் தோற்று விட்டது, இதனால் நாட்டுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்று உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற கருத்தை அமித்ஷா கூறியிருக்கிறார். இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு, ஹிட்லர், முசோலினி பாதையில் சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டு வருகிற நோக்கத்தில் அவரது பதுங்கு திட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதைவிட இந்தியாவுக்கு பேரழிவு வேறு எதுவும் இருக்க முடியாது.