3 வாரங்களுக்குள் 500 மருத்துவர்கள், 2,345 செவிலியர்கள் நியமனம்

தமிழகத்தில் மூன்று வாரங்களுக்குள் 500 அரசு மருத்துவர்கள், 2,345 செவிலியர்கள், 510 தொழில் நுட்ப ஊழியர்கள், 310 சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
3 வாரங்களுக்குள் 500 மருத்துவர்கள், 2,345 செவிலியர்கள் நியமனம்
Published on
Updated on
1 min read


தமிழகத்தில் மூன்று வாரங்களுக்குள் 500 அரசு மருத்துவர்கள், 2,345 செவிலியர்கள், 510 தொழில் நுட்ப ஊழியர்கள், 310 சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடங்களில், மேம்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதிகளுடன் கூடிய, அதிநவீன விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவு (தாய்), இருதய சிறப்பு சிகிச்சைக்கான ஆய்வகம் (கேத் லேப்) ஆகியவற்றின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர் கோ.சங்கரநாராயணன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் புதிய மையங்களை திறந்து வைத்தனர்.
 அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது: தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான விழுப்புரத்தில்,  உலக தரத்திலான அதிநவீன மேம்படுத்தப்பட்ட அவசரச் சிகிச்சை மையம் ரூ.75 லட்சம் மதிப்பில் தாய் திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக விழுப்புரத்தில்தான் இந்த அதிநவீன அவசரச் சிகிச்சை மையம் முன்மாதிரியாக தொடங்கப்பட்டுள்ளது. 
இதற்காக நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், அவசரச் சிகிச்சை மையம் 24 மணி நேரமும் சிறப்பான முறையில் செயல்படும். ஜீரோ  நிமிடம் கூட தாமதிக்காமல் அவசரச் சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் இந்த மையம் செயல்படும். மேலும், ரூ.3.5 கோடி மதிப்பில் ஆய்வகத்துடன் கூடிய இருதய அறுவைச் சிகிச்சை மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் இருதய அறுவை, ஆஞ்ஜியோ கிராம், ஆஞ்ஜியோ பிளாஸ்ட் போன்ற சிகிச்சைகளுக்காக, சென்னை, புதுவைக்கு செல்ல வேண்டியதில்லை. இங்கேயே சிறப்பான சிகிச்சையை மேற்கொள்ளலாம். 
வரும் மூன்று வாரங்களுக்குள் சுகாதாரத் துறையில் 500 மருத்துவர்கள், 2,345 செவிலியர்கள், 510 தொழில் நுட்ப ஊழியர்கள்,  310 சுகாதார ஆய்வாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு நியமனம் நடைபெறவுள்ளது என்றார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com