சிபிசிஐடி முன்பு மாணவர் உதித் சூர்யா ஆஜராக முடியுமா? முன் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் கேள்வி

சிபிசிஐடி முன்பு மாணவர் உதித் சூர்யா ஒரு நாள் ஆஜராகி விளக்கமளிக்க முடியுமா? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
சிபிசிஐடி முன்பு மாணவர் உதித் சூர்யா ஆஜராக முடியுமா? முன் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் கேள்வி


மதுரை: சிபிசிஐடி முன்பு மாணவர் உதித் சூர்யா ஒரு நாள் ஆஜராகி விளக்கமளிக்க முடியுமா? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மாணவர் உதித் சூர்யா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, மாணவர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினார்.

மாணவரிடம் கேட்டு சொல்வதற்கு வழக்குரைஞருக்கு பிற்பகல் 2.15 மணி வரை அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.

மேலும், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு நேற்று மாற்றப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடிக்கு எப்போது வழங்கப்படும் என்று தமிழக அரசுக்கும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு அண்மையில் மின்னஞ்சல் மூலமாகப் புகார் வந்தது.

அந்தப் புகாரின் அடிப்படையில் கல்லூரி பேராசிரியர்கள், உதித் சூர்யாவிடம் விசாரணை செய்தனர்.  இதில் உதித் சூர்யா, முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து உதித் சூர்யாவின் நீட் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது, அதில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்துக்கும், உதித் சூர்யாவுக்கும் வித்தியாசம் இருந்தது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தேனி மாவட்ட காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் உதித் சூர்யா மீதும், அவருக்காக தேர்வு எழுதிய நபர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

விசாரணையில், உதித் சூர்யா ஏற்கெனவே இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்ததால், மூன்றாவது முறையும் தோல்வியடைந்துவிட்டால் மருத்துவம் படிக்க முடியாது என்பதால், உதித் சூர்யாவும், அவரது பெற்றோரும் இணைந்து ஏற்கெனவே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு நபரை ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்திருப்பதும், முறைகேட்டில் சிக்காமல் இருப்பதற்கு மும்பையில் தேர்வு எழுதியிருப்பதும் தெரியவந்தது.

சிபிசிஐடி.க்கு மாற்றம்: இதைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல்துறையின் தனிப்படையினர் கடந்த வாரம் சென்னையில் உதித் சூர்யா குறித்தும், அவரது பெற்றோர் குறித்தும் விசாரணை செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் உதித் சூர்யாவையும், அவரது பெற்றோரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் இவ் வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை சிபிசிஐடி.க்கு மாற்றி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இவ் வழக்குக்குரிய ஆவணங்களைத் தேனி மாவட்ட போலீஸார் உடனடியாக சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார், இவ் வழக்கு குறித்து விரைந்து விசாரணையைத் தொடங்க உள்ளனர்.

இதற்கிடையே, மாணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவை விசாரித்த மதுரைக் கிளை நீதிமன்றம், சிபிசிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜராக முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com