மதுரை காமராஜர் பல்கலையில் மதிப்பெண் பட்டியல் முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் 

மதுரை காமராஜர் பல்கலையில் மதிப்பெண் பட்டியல் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: மதுரை காமராஜர் பல்கலையில் மதிப்பெண் பட்டியல் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வியாழனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை பாதுகாப்பு குழு சார்பில் கடந்த 2018 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பல்வேறு மோசடிதனங்களை அம்பலப்படுத்தியது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லதுரை செயல்பட்ட காலத்தில் சட்டவிரோதமாக அவரால் நியமிக்கப்பட்ட பதிவாளர் சின்னையா, தேர்வாணையர் ரவி, கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், மனிதவள மேம்பாட்டு மைய இயக்குனர் கலைச்செல்வன் ஆகியோரின் பின்னணி குறித்து ஆதாரங்களோடு அறிக்கை பேசியது.

இப்போது கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் மதிப்பெண் பட்டியல் முறைகேடு விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால்  பல்வேறு முறைகேடுகளை மறைத்து தான் இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கூடுதல் தேர்வாணையராக நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது தெரிய வருகிறது.

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்களாக இருந்த கற்பக குமாரவேல், கல்யாணி மதிவாணன் ஆகியோரின் பதவிக்காலத்தில் ஊழல்களால் சீரழிந்து போயிருந்த நிலையிலே, இவர்களுக்கெல்லாம் ஒத்துழைத்த  செல்லத்துரைக்கு துணைவேந்தராகும் வாய்ப்பு கிடைத்தது. தகுதியற்ற பலரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளாகப் பணி நியமனம் செய்து கொண்டு தன்னுடைய ஊழல் கோட்டையைப் பலப்படுத்திக் கொண்டார் செல்லதுரை எனப் பேசபடுகிறது.

எனவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து அவரால் செய்யப்பட்ட நியமனங்கள் உள்ளிட்டு அனைத்தும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதுகுறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com