சுபஸ்ரீ வழக்கில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கிருஷ்ணகிரியில் கைது

சென்னை அருகே பேனர் விழுந்து இளம்பெண் இறந்த வழக்கில், தேடப்பட்டு வந்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டார்.
மரணமடைந்த இளம்பெண் சுபஸ்ரீ
மரணமடைந்த இளம்பெண் சுபஸ்ரீ
Published on
Updated on
1 min read


சென்னை அருகே பேனர் விழுந்து இளம்பெண் இறந்த வழக்கில், தேடப்பட்டு வந்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டார்.

ஜெயகோபாலின் இல்லத் திருமண விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர், சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீயின் மீது விழுந்ததில், அவர் நிலைதடுமாறி சாலையில் விழ, அவர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23). பொறியாளரான இவர், கடந்த 12ஆம் தேதி துரைப்பாக்கம் -பல்லாவரம் ரேடியல் சாலையில் மொபெட்டில் பள்ளிக்கரணை அருகே செல்லும்போது, அங்கு சாலையின் நடுவே தடுப்பின் மீது கட்டப்பட்டிருந்த திருமண வரவேற்பு பிளக்ஸ் பேனர் திடீரென இவர் மீது விழுந்தது. அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது மோதியதில், அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம், பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளையில், சென்னை உயர்நீதிமன்றமும்  கண்டனத்தை தெரிவித்தது. இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் தண்ணீர் லாரி ஓட்டுநர் மனோஜை கைது செய்து, இந்திய குற்றவியல் சட்டம் 279, 336, 304(ஏ)  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அதேபோல, தனது மகன் திருமணத்துக்காக விபத்து நடந்தப் பகுதி முழுவதும் அனுமதியின்றி பேனர் வைத்ததாக அதிமுக நிர்வாகி ஜெயகோபாலையும் போலீஸார் இவ் வழக்கின் இரண்டாவது குற்றவாளியாக சேர்த்தனர். ஆனால், ஜெயகோபால் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், மரணத்தை விளைவிக்கும் வகையில் குற்றத்தை செய்ய முயற்சித்தல் பிரிவின் கீழ் ஜெயகோபால் மீது புதிதாக ஒரு பிரிவில் கடந்த 17-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில், அந்த பேனரை தயாரித்து கொடுத்த ஜெயகோபாலின் உறவினர் மேகநாதனும் புதிதாக சேர்க்கப்பட்டார். 

வீட்டில் அழைப்பாணை: விபத்து நடைபெற்று இரு வாரங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், ஜெயகோபால் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம், சென்னை காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இது தொடர்பாக ஜெயபாலின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் விசாரணையில் ஈடுபட்டர்.

இதன் ஒரு பகுதியாக, போலீஸார், பள்ளிக்கரணை கோபால் நகரில் உள்ள ஜெயகோபால் வீட்டுக்கு புதன்கிழமை இரவு சென்றனர். அங்கு  பூட்டி கிடந்த அவரது வீட்டின் கதவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணையை போலீஸார் ஓட்டினர்.

இந்த நிலையில், அவர் கிருஷ்ணகிரியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com