ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது கிருஷ்ணா நீர்; மலர் தூவி வரவேற்பு

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.
கிருஷ்ணா நதி நீர்
கிருஷ்ணா நதி நீர்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.

தமிழகம் வந்தடைந்த கிருஷ்ணா தண்ணீருக்கு அதிகாரிகள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

பூண்டி ஏரிக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு வியாழக்கிழமை 1,500 கன அடியாக இருந்த நிலையில், வரும் நாள்களில்  மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

சென்னை குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மாநில அமைச்சர்கள், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் நேரில் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதைத் தொடர்ந்து, புதன்கிழமை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. கண்டலேறு அணையின் 2 மதகுகள் வழியாக நீர் பாய்ந்து வருகிறது.  முதலில் 1,000 கனஅடியாகத் திறக்கப்பட்ட தண்ணீர், பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.  இந்த அளவு வியாழக்கிழமை 1,500 கனஅடியாக உயர்த்தப்பட்டது. வரும் நாள்களில் பூண்டி ஏரிக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. 

கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 152 கிலோ மீட்டர் தொலைவு கடந்து, 5 நாள்களில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 நாட்களிலேயே எல்லையை வந்தடைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சோமசீலா அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அங்கிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் 1 டிஎம்சி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது. எனவே கண்டலேறு அணையில் இருந்து, பூண்டி ஏரிக்கு இந்த முறை கூடுதலாக கிருஷ்ணா தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ஆந்திர மாநில அதிகாரிகள் கூறுகையில், "சோமசீலா அணையில் தற்போது 65 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அங்கிருந்து கண்டலேறு அணைக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் வீதம் வந்து கொண்டிருக்கிறது. கண்டலேறு அணையில் 13 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 1.5 டி.எம்.சி. தண்ணீர் படிப்படியாக திறந்துவிடப்படும். கண்டலேறு அணைக்கான நீர் வரத்தின் அடிப்படையில், இனிவரும் காலங்களில் சென்னைக்கு தண்ணீர் திறந்து விடப்படும்' என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com