
திருப்பூர் மாவட்டம், அவிநாசி புறவழிச் சாலை மேம்பாலத்தில் கேரள அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை பலத்த காயமடைந்தனர்.
கேரள மாநிலம், பந்தனம்திட்டாவிலிருந்து கேரள அரசு சொகுசுப் பேருந்து 26 பயணிகளுடன் பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ஜெய்சன் ஓட்டிச் சென்றார். வழியில், இப்பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.20 மணி அளவில் அவிநாசி புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு சுமார் 30 அடி தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு மேம்பாலத்தின் இருபுறச் சாலைகளுக்கு இடைப்பட்ட பகுதிக்குள் கவிழ்ந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர், போலீஸார் உள்ளிட்டோர் பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இவ்விபத்தில், திருச்சூரைச் சேர்ந்த சைடா டேவிட் (26), கொல்லத்தைச் சேர்ந்த ஜோபி (33), பந்தனம்திட்டாவைச் சேர்ந்த சாஜா தாமஸ் (24), திருச்சூரைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி விஜிதா (28), அவரது மகள் கிருஷ்ண நந்தா (4), பந்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த சூபி (28), அதே பகுதியைச் சேர்ந்த லிட்டி மேத்யூ (25), சுஜேஷ்குமார் (34), நாராயண நயினார் மகள் அக்ஷயா (7), பிரதீப்குமார் (41), தன்யா (36), திருச்சூர் பகுதியைச் சேர்ந்த சுகில் (25) உள்பட 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமûடைந்தனர். இவர்கள், கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பேருந்து ஓட்டுநர் ஜெய்சன் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதால் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டார்.
போலீஸார் விசாரணையில், ஓட்டுநர் ஜெய்சன் மது போதையில் பேருந்தை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இவ்விபத்தில், பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.