
நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த பின்னரும், கிராமப்புற மக்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் விரும்புவதில்லை என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு கடந்த மார்ச் 6-ஆம் தேதி பிறப்பித்த அரசாணையில் கிராமப்புறங்கள், மலைப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, மருத்துவ மேற்படிப்பில் சேர சலுகை மதிப்பெண்கள் வழங்குவதற்காக அவர்கள் பணியாற்றும் பகுதிகளை தொலைதூரப் பகுதி, எளிதில் அணுக முடியாத பகுதி, கிராமப்புற பகுதி என வகைப்படுத்தி வரையறுத்திருந்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், தாங்கள் பணியாற்றும் பகுதிகளை எளிதில் அணுக முடியாத பகுதி என அறிவிக்கக் கோரியும் மருத்துவர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
பணியிடப் பகுதிகளை வரையறை செய்வது தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் பரிந்துரை முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இந்த வரையறையை மாற்றக் கோருபவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி குழுவினரிடம் வரும் மே மாதம் 31-ஆம் தேதிக்குள் மனு அளிக்கலாம். அந்த மனுக்களை ஆய்வு செய்து வரையறை மாற்றம் தொடர்பாக ஜூலை 31-ஆம் தேதிக்குள் வரையறைக் குழு தன் முடிவை அறிவிக்க வேண்டும்.
மேலும் நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த பின்னரும், கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள் விரும்புவதில்லை.
இதனால் கிராமப்புற மக்களை மேம்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகள் பலனளிப்பது இல்லை என நீதிபதி வேதனை தெரிவித்தார்.