
MK Stalin Lok Sabha Election 2019
சென்னை: தேர்தல் பிரசாரத்தில் கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியைத் தொடர்புபடுத்திப் பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்தத் தடை உத்தரவை நீக்க கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அவதூறு வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புபடுத்தி பேசி வருகிறார். கொடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் அதுதொடர்பாக பேசுவது நீதி பரிபாலனத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தேர்தல் பிரசாரத்தில் இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் தற்போது தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால், இந்த வழக்கு குறித்து அவரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க இரண்டு வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, தமிழக அரசு தரப்பில், அதுவரை கொடநாடு விவகாரம் தொடர்பாக அவர் எதுவும் பேசக் கூடாது என உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக வரும் ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.