
கோவை மாவட்டம், துடியலூர் அருகே 6 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, கஸ்தூரிநாயக்கன்புதூரைச் சேர்ந்த பிரதீப், வனிதா தம்பதி. இவர்களது இரண்டு பெண் குழந்தைகளில் 6 வயது பெண் குழந்தை திப்பனூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார். 3 வயது பெண் குழந்தை அங்கன்வாடியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், மார்ச் 25- ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளில் 6 வயது சிறுமி மாயமானதைக் கண்டு தாய் வனிதா அதிர்ச்சியடைந்தார். இது குறித்து, துடியலூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், மாயமான சிறுமியின் சடலம் வீட்டின் அருகே துணி சுற்றப்பட்ட நிலையில் உடலில் காயங்களுடன் மார்ச் 26- ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. உடற்கூராய்விலல் அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், இக் கொலைக்கு காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி பாண்டியராஜனின் நேரடி மேற்பார்வையில் பெ.நா.பாளையம் டிஎஸ்பி க்கள் மணி, பாலமுருகன் ஆகியோர் தலைமையில் 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.
சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சிலரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் கொலைக்கு காரணமானவர் தொண்டாமுத்தூர் அருகே உலியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் சந்தோஷ்குமார் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.