
நிகழ்ச்சியில் பேசுகிறார் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியம். உடன் (இடமிருந்து) துணைவேந்தர் எஸ். வைத்திய சுப்பிரமணியம், முனைவர் ரவிசேகர்ராஜூ.
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்த்ரா சட்டவியல் பள்ளியில் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்டவியல் மதிப்புறு வருகை தரு பேராசிரியராக உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞருமான கோபால் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை அரசியலமைப்பின் நீதி நெறிகள் என்ற தலைப்பில் நடைபெற்ற 15-வது நானி பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியம் பங்கேற்று பேசியது: சமுதாயத்தின் கூட்டு நலனைத் தீர்மானிப்பதற்குத் தனி மனித உரிமையைப் பாதுப்பதே அரசியலமைப்பின் நீதி நெறிகள். அரசியலமைப்பு ஒழுக்க நெறி மீதான சரியான பார்வை இருக்க வேண்டும். சட்டம் மற்றும் சமூகப் பன்முகத் தன்மை வளர்ந்து வரும் நிலையில் அதனுடைய அதிகார வரம்பை அரசுத் தெளிவுபடுத்துவது அவசியமானது.அரசியலமைப்புச் சட்டத்தைப்போல அரசியலமைப்பு நீதி நெறிகள் மீதும் ஈடுபாடு இருக்க வேண்டும். எனவே, அரசியலமைப்பு நீதி நெறிகள் மீதான ஈடுபாட்டை குடிமக்கள் உறுதி செய்ய வேண்டும். அரசியலமைப்பின் மையக்கருத்தைத் தனி நபர் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு வாதம் என்பது அரசியலமைப்பு நீதிநெறியின் ஓர் அங்கம். அரசியலமைப்பு உரை மற்றும் அரசியலமைப்பு உரை உரிமையை சட்டவியல் மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்றார் கோபால் சுப்பிரமணியம். இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். வைத்தியசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.