
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் சார்பில் நட்சத்திர பேச்சாளர்களாக 838 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் திமுக, அதிமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும், பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு தேசியக் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் இறுதி வேட்பாளர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நட்சத்திரப் பேச்சாளர்கள்: வாக்கு சேகரிப்பில், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்களும் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை நட்சத்திர பிரசார நபர்களாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது.
நட்சத்திர பிரசார நபர்கள் குறித்த பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளித்து சம்பந்தப்பட்ட நபர்கள் பிரசாரம் செய்வதற்கு முன் அனுமதி பெறப்பட்டால் அவர்களுக்கான போக்குவரத்து செலவு உள்ளிட்டவை வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படாது.
வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய காலத்தில் இருந்து ஏழு நாள்களுக்குள் இதற்கான பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளித்தால் போதும். உரிய பரிசீலனைக்குப் பிறகு, நட்சத்திர பிரசார நபர்கள் குறித்த பட்டியலுக்கு ஆணையம் ஒப்புதல் அளிக்கும். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி எனில், 40 பேர் அடங்கிய பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட கட்சி எனில் 20 பேர் அடங்கிய பட்டியலையும் அளிக்கலாம்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள 40 கட்சிகளின் சார்பில் பட்டியல்கள் அளிக்கப்பட்டன.
அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அந்தக் கட்சிகளில் இருந்து மொத்தம் 838 பேர் நட்சத்திர பிரசார நபர்களாக அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு முன்அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவை வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்கப்படாது.
குறிப்பிடத்தக்க நபர்கள் யார்: பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தேசிய-மாநிலத் தலைவர்கள், அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நட்சத்திர பிரசார நபர்களாக அங்கீகரிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திரங்கள் யார்?: பிரசார நபர்களில், மக்களிடம் வெகுவாக அபிமானம் பெற்ற திரை மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, கோவை சரளா, வையாபுரி, நாசர் ஆகியோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபல கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து, குஷ்பு, பாஜக சார்பில் ஹேமமாலினி, திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், வாசு விக்ரம் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.