தமிழகத்துக்கு பெரும் சவால் பாஜக: ப. சிதம்பரம்

தமிழகத்துக்கு பெரும் சவாலாக பாஜக வந்துள்ளது என்றார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
தமிழகத்துக்கு பெரும் சவால் பாஜக: ப. சிதம்பரம்
Updated on
1 min read

தமிழகத்துக்கு பெரும் சவாலாக பாஜக வந்துள்ளது என்றார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே  கோட்டையூர் பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சாக்கோட்டைமேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது: தேர்தல் என்பது மக்களுக்கானது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வரும் கட்சிகள் நிறைவேற்ற வேண்டும். திமுக ஆட்சியின் போது சொன்னதை செய்தார்கள். அதேபோல, காங்கிரஸூம் நூறு நாள் வேலைத்திட்டம், விவசாயக் கடன் ரத்து, கல்விக்கடன் போன்ற வாக்குறுதிகளை அளித்தோம். அதனை நிறைவேற்றவும் செய்தோம். காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் ஏராளமான வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன. அதில், தமிழகத்தில் சிவகங்கை தொகுதியில்தான் அதிக அளவில் வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன. இதுபோன்ற நீண்ட பட்டியல் இருக்கிறது. திமுக ஆட்சியிலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், பாஜக என்ன செய்தது. அவர்கள் சொன்ன எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், சொல்லாததைச் செய்தார்கள். ரூ. 500, 1000 நோட்டுகளை மதிப்பிழப்பு செய்தவர் மோடி. அவருக்கு யார் இந்த அதிகாரத்தைத் தந்தது. ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தைப் பறித்துக் கொண்டு, அவரே பணமதிப்பு இழப்பை தொலைக்காட்சியில்  அறிவித்தார். தமிழ் மண்ணில் பெண்களுக்கு அடிப்படை உரிமை, சொத்துரிமை, கலப்புத் திருமணம் போன்ற புரட்சி விதையை விதைத்தவர் பெரியார். அவரது வழியில் காமராஜர், அண்ணா போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று பாஜக தமிழகத்துக்கு பெரும் சவாலாக வந்துள்ளது.கருணாநிதி இல்லாத முதல் தேர்தலை தமிழகம் சந்திக்கிறது. அவர் மேல் உண்மையான அன்பு வைத்திருப்பவர்கள் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றார்.
இதில், சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான கே.ஆர். பெரியகருப்பன்,  சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி, மதிமுக மாவட்டச் செயலர் புலவர் செ. செவந்தியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கண்ணகி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com