
யூனியன் பிரதேசமான புதுவைக்கு 25 சதவீத நிதியை மட்டுமே வழங்கி மத்திய அரசு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
புதுவையில் ஆளும் காங்கிரஸ்- திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதுவை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து புதுச்சேரியில் வைகோ ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என்ற திட்டத்தை ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சாத்தியக் கூறுகள் இல்லை என பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் திட்டத்தை முறைப்படுத்தி, செயல்படுத்தினால் சாத்தியமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற ஒற்றை தன்மையை திணித்து, இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்க எண்ணுகிறது. நாட்டில் மதவெறிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
மத்திய அரசு தமிழகத்தையும், புதுவையையும் வஞ்சித்து வருகிறது. கஜா புயலில் உயிரிழந்த தமிழர்களுக்காக பிரதமர் மோடி அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. உலகைச் சுற்றி வந்த அவர், உள்ளூர் விவசாயிகளைக் கவனிக்கத் தவறிவிட்டார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதாகக் கூறினார். ஆனால், 2 ஆயிரம் பேருக்குக்கூட வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவில்லை.
மேகேதாட்டுவில் அணைக் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாழாகும். இதேபோல, புதுவை மாநிலம் காரைக்கால் பகுதியும் பாதிக்கப்படும்.
இதைத் தடுக்கும் கடமை நமக்கு உள்ளது. புதுவையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பாஜக திட்டமிட்டே ஆளுநர் கிரண் பேடியை நியமித்தது. புதுவை யூனியன் பிரதேசமாக இருப்பதால், மத்திய அரசின் நிதி 25 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. இது புதுவையை வஞ்சிக்கும் செயலாகும்.
ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாக்கவும், மனிதநேயம், சகோதரத்துவம் தழைக்கவும் மதச்சார்பற்ற சக்திகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார் வைகோ.