
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூர சம்பவம் குறித்து புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கோவை எஸ்பியாக இருந்த பாண்டியராஜனை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்ட புதிய எஸ்பியாக சுஜித்குமாரை நியமித்திருக்கும் தமிழக அரசு, எஸ்பி பாண்டியராஜன் எங்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிவிக்கவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சி கொடூர வழக்கில் மெத்தனமாக நடந்து கொண்டது, பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டு மிகப்பெரிய சட்ட விதி மீறலை செய்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், தற்போது கோவையில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரு வாரத்துக்குப் பிறகு குற்றவாளி அடையாளம் காணப்பட்டதற்கும் பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தி நிலவிய நிலையில் பாண்டியராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.