
பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக விவாதத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் பொதுச்செயலர் ஈஸ்வரன் விடுத்த அழைப்பை ஏற்பதாக அமைச்சர் பி.தங்கமணி கூறியுள்ளார்.
குமாரபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:
அரசியலுக்கு வந்தால் எழக்கூடிய விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும். அதைவிடுத்து ஏப்.7-ஆம் தேதி 11 மணிக்கு நேருக்கு நேர் விவாதத்துக்கு தயாரா என கொமதேக பொதுச் செயலர் ஈஸ்வரன் அழைப்பு விடுக்கிறார். ஒத்த கருத்துடையவர்களும், மாற்றுக் கருத்துடையவர்களும் ஆயிரக்கணக்கானோர் எதிரெதிரே சந்தித்துப் பேசினால் பொது அமைதியை சீர்குலைத்துவிடும். தற்போது வாக்குச் சேகரிக்கும் பணிகள் இரு கட்சியினருக்கும் உள்ளதால் இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்கள் முன்னிலையில் இல்லாமல், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுகவினரை நம்பாமல் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வரவழைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் அதிமுக, பாஜக வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுள்ளது. தேர்தல் காலங்களில் சூழ்நிலைக்கேற்ப கூட்டணி நிலைப்பாடு மாறுவது இயற்கை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு வயது முக்கியமல்ல. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் அடிப்படையான எண்ணமே அவசியம். பொள்ளாச்சி விவகாரத்தில், சட்டப் பேரவைத் துணைத் தலைவர் ஜெயராமனுக்கு தொடர்பு இல்லை என கொமதேக மாநிலத் துணைத் தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். தோல்வி பயத்தில் அதிமுக மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக கொமதேக பொதுச்செயலர் ஈஸ்வரன் பேசி வருகிறார். அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி.தினகரனைத் தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றார்.