
அரியலூரில் குடிபோதையில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய தேர்தல் பார்வையாளர், அப் பணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி நடைபெறுவதால் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த ஹரியாணாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமன்த் கல்சன் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர், அரியலூர் அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி தேர்தல் பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் சுற்றுலா மாளிகையில் இருந்து வானத்தை நோக்கி 9 முறை துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டதாம்.
இதுகுறித்து தகவலறிந்த தொகுதி தேர்தல் அலுவலரும், அரியலூர்ஆட்சியருமான மு.விஜயலட்சுமி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(பொ) திஷா மித்தல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தேர்தல் பார்வையாளர் ஹேமன்த் கல்சன், மதுபோதையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அவரது அறையில் இருந்து வெளியே வந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரின் துப்பாக்கியை வாங்கி திடீரென வானத்தை நோக்கி 9 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தனது அறைக்கு அந்தத் துப்பாக்கியுடன் சென்றதாகத் தெரியவந்தது. இதையடுத்து, மாநில தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு உத்தரவின்பேரில், தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்து ஹேமன்த் கல்சன் விடுவிக்கப்பட்டுள்ளார்.