
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூத்த வழக்குரைஞர் வில்சன், திமுக வழக்குரைஞர் அணிச் செயலாளர் கிரிராஜன் ஆகியோர் மனு அளித்தனர்.
மனு விவரம்: தமிழகத்தின் பெரிய கட்சியான திமுக, மாநிலத்தில் பலமுறை ஆட்சி அமைத்திருப்பதுடன், மத்திய அரசாங்கத்திலும் அங்கம் வகித்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக, பாஜக கூட்டணிக்குச் சாதகமாகவே இந்தியத் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. குறைந்த உறுப்பினர்களைக் கொண்டு ஆட்சி செய்து வரும் அதிமுக, ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்குப் பிறகு நீடிப்பது சிரமம் என்பதாலேயே திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த மறுத்து வருகிறது. 4 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கு சட்ட ரீதியான எந்தத் தடையும் இல்லாத நிலையிலும், தேர்தல் ஆணையம் இவ்வாறு செயல்பட்டு வருகிறது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கிலும் உரிய நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்குச் செல்வதற்காக தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். மார்ச் 7-ஆம் தேதிதான் அவர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். அதேபோல மற்றொரு எம்.எல்.ஏ, மார்ச் 11-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் மிக விரைவாகச் செயல்பட்டு குஜராத் மக்களவைத் தேர்தலுடன் 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று மார்ச் 13-ஆம் தேதியே அறிவித்துவிட்டது.
இதன் மூலம் தேர்தல் ஆணையம் குஜராத்துக்கும், தமிழகத்துக்கும் வெவ்வேறான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. எனவே, தமிழகத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும்.
துரைமுருகன் வீட்டில் சோதனை: ஆளும்கட்சியினர் காவல் துறையைப் பயன்படுத்தியும், ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பயன்படுத்தியும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருவது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்தும் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக இருக்கிறது.
திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில், வருமான வரி சோதனையா அல்லது தேர்தல் பணி நிமித்தமான சோதனையா என்று தெரிவிக்காமல் அவர் வீட்டில், சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனை மூலம் அவர் அப்பழுக்கற்றவர் என்பதை தேர்தல் ஆணையம் உலகுக்கு உணர்த்தியதற்கு நன்றி. இனிவரும், காலங்களிலாவது தேர்தல் ஆணையம் நியாயமான, நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் என்பதை உறுதி செய்திட வேண்டுகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதே மனுவை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கும் திமுக தலைமை அனுப்பியுள்ளது.