இளைஞர்கள் வாக்களித்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்: கமல்ஹாசன்

சுட்டுரையில் கோபம் காட்டும் இளைஞர்கள், மக்களவைத் தேர்தலில் வாக்களித்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.
இளைஞர்கள் வாக்களித்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்: கமல்ஹாசன்
Updated on
1 min read

சுட்டுரையில் கோபம் காட்டும் இளைஞர்கள், மக்களவைத் தேர்தலில் வாக்களித்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கமல்ஹாசன் பேசியதாவது: புதுச்சேரி என்றாலே எனக்கு பாரதி பெயர்தான் நினைவுக்குவரும். பாரதியை பாதுகாத்து அவரது ஆயுளை நீட்டித்த ஊர் இது. புதுச்சேரியின் தனித் தன்மையை ஒருபோதும் இழக்கக் கூடாது. புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து தேவை. படித்தவர்கள் அனைத்து இனத்திலும் உள்ளனர் என்பதை மக்கள் நீதி மய்யம் நம்புகிறது. சுட்டுரையில் கோபம் காட்டும் இளைஞர்கள், தேர்தலில் வாக்களித்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டும். நல்ல யோசனைகளை வழங்குவதே எங்களது விரோதிகள்தான். சுட்டுரையில் மட்டுமே இயங்கி வந்ததாக என்னை விமர்சனம் செய்ததால் 3 மாதங்களில் அரசியல் களத்துக்கு நேரடியாக வந்துவிட்டேன்.
மக்கள் நீதி மய்யம் தனது தேர்தல் அறிக்கையில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து சிலர் கேள்வி கேட்கின்றனர். வேலைகளை பல பிரிவுகளாகப் பிரித்து, ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பு என இலக்கு வைத்து, 5 ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.
வளங்களை முறையாகக் கையாளத் தெரிந்த பன்னாட்டு நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.  மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு பிணையில்லா கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இல்லத்தரசிகளையும் வீட்டில் இருந்தே சுயதொழில் செய்ய ஊக்கப்படுத்துவோம். விவசாயத்தை லாபகரமாக மாற்றும் வகையில் தனித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில் மொத்தமுள்ள 60 ஆயிரம் கிராமங்களில் 30 ஆயிரம் இடங்களில் குளங்களை வெட்டினாலே கூடுதல் வேலைவாய்ப்பை அளிக்க முடியும். தமிழத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நல்ல விஷயங்களைச் செய்வதாக சொல்வது வழக்கம். ஆனால், இரு கட்சிகளும் அவ்வாறு செய்யவில்லை. தங்களை மட்டுமே வளப்படுத்திக்  கொண்டனர்.
மக்கள் அளிக்கும் அதிகாரத்துக்காகவே மக்கள் நீதி மய்யம் காத்திருக்கிறது. இந்தத் தேர்தல் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல் அல்ல. ஒவ்வொரு பகுதி மக்களின் குரலை மக்களவையில் எதிரொலிக்க வைக்கச் செய்யும் தேர்தல். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே தாமதம் ஆனாலும் பரவாயில்லை என்று நான் பொது வாழ்வுக்கு வந்து விட்டேன். இனி எஞ்சிய வாழ்க்கையை மக்களுக்காகவே அர்ப்பணிப்பேன். எனது சொந்த வாழ்க்கைக்குத் தேவைப்படும் பணத்துக்காக மட்டுமே தற்போது திரைப்படத்தில் நடித்து வருகிறேன் என்றார். முன்னதாக, கட்சிக் கொடியை கமல்ஹாசன் ஏற்றினார்.
இதில், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன், சிறப்புப் பேச்சாளர் ஸ்ரீபிரியா, புதுவை மாநிலத் தலைவர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன், பொதுச் செயலர் ராஜன், பொருளாளர் தா.மோ.தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com