உணவு உற்பத்தியில் தமிழகம் முதலிடம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

உணவு உற்பத்தியில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் பிடித்து மத்திய அரசின் விருது பெற்றுள்ளது என தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஆம்பூரில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஆம்பூரில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
Updated on
2 min read

உணவு உற்பத்தியில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் பிடித்து மத்திய அரசின் விருது பெற்றுள்ளது என தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதி புதியநீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், ஆம்பூர் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ஜெ. ஜோதிராமலிங்கராஜா ஆகியோரை ஆதரித்து ஆம்பூர் நகரக் காவல் நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு அவர் பேசியது:
உணவு உற்பத்தியில் தமிழகம் கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து விருது பெற்று வருகிறது. தொழில் உற்பத்தியில் 2-ஆம் இடம் பிடித்துள்ளது.  தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு விளங்குகிறது. இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஆணையம் அமைக்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்.  ஹஜ் மானியம் ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டது.
நல்லவர்கள் ஒன்றாக கூடி அமைக்கப்பட்டது தான் அதிமுகவின் வெற்றிக் கூட்டணி. மத்தியில் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டு காலம் திமுக இடம் பெற்றிருந்தது. திமுகவைச் சேர்ந்தவர்கள் 9 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். ஆனால் திமுக ஆட்சியில் எந்த தொலைநோக்குத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. திமுகவினருக்கு நிர்வாகத் திறமை இல்லை. இலங்கை தமிழர்கள் கொலை செய்யப்பட்டதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது திமுக, காங்கிரஸ் அரசுகள் தான்.
காவிரி நதிநீர் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாணையில் கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக காணாமல் போய்விடும் என்று கூறுகின்றனர். ஆனால் யாராலும் அதிமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது.
அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்களால்தான் தற்போது இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தனியாக இயக்கம் கண்டு வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. வேலூர் தொகுதி மிகவும் விழிப்புணர்வு பெற்ற தொகுதியாகும் என்றார்.
அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல், ஆம்பூர் நகர அதிமுக செயலர் எம்.மதியழகன், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலர் ஆர்.வெங்கடேசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் ஜி.ஏ. டில்லிபாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குடியாத்தத்தில்... குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், குடியாத்தம் பேரவைத் தொகுதி வேட்பாளர் ஆர். மூர்த்தி ஆகியோரை ஆதரித்து அவர் பேசியது:  தமிழகத்தில் வீடில்லாதவர்களே இருக்கக் கூடாது என்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். 2023- க்குள் தமிழகத்தில் வீடில்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும் என்றார்.
எம்எல்ஏ ஜி. லோகநாதன், அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, ஒன்றியச் செயலர் வி. ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடியில்... வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com