
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்படும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தால் வாக்குப் பதிவில் எந்தத் தாமதமும் ஏற்படாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது:
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மாநிலத்தில், 67 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 1,400 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில தொகுதிகளில் வாக்காளர்கள் அதிகமாக இருந்தால், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அதிகமான வாக்காளர்களோ, நீண்ட வரிசையோ இருந்தாலும் அனைவரும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
டோக்கன்கள் விநியோகம்: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு பின்வரிசையில் இருந்து டோக்கன்கள் விநியோகிக்கப்படும். அவர்கள் அந்த டோக்கன் அடிப்படையில் தங்களது வாக்குகளைச் செலுத்தலாம். மாலை 6 மணிக்குப் பிறகு வாக்குச்சாவடிகளுக்குச் சென்றால் வாக்களிக்க முடியாது.
தாமதம் ஏற்படாது: இந்தத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்வதற்கான ஒப்புகைச் சீட்டு இயந்திரம் பொருத்தப்பட உள்ளது. இந்த இயந்திரத்தைப் பொருத்துவதால் வாக்களிப்பதில் எந்தத் தாமதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு சோதனைகளைச் செய்துள்ளது. எனவே, வாக்குப்பதிவில் எந்தத் தாமதமும் ஏற்பட வாய்ப்பில்லை.
வருமான வரிச் சோதனை: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனின் இல்லத்தில் நடந்த சோதனையானது, மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற சோதனைகளின்போது வருமான வரித் துறை சார்பில் சில நடைமுறைகள் பின்பற்றப்படும். அந்த நடைமுறைகளே இப்போதும் பின்பற்றப்பட்டுள்ளன.
4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்: தமிழகத்தில் காலியாகவுள்ள நான்கு தொகுதிகளில் இப்போதைய நிலவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். தேர்தல் ஆணையம் எப்போது தேதி அறிவிக்குமோ, அப்போது தேர்தல் நடத்தத் தயாராக உள்ளோம்.
தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தில் ரூ.19 கோடியைத் திருப்பித் தந்துள்ளோம். சிதம்பரம் மக்களவைத் தொகுதி சட்டம்-ஒழுங்கு காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி ஹேமந்த், அரியலூர் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார். அவர் சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் திறந்தவெளியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவரை உடனடியாக தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் தமிழக வருகை குறித்த விரிவான பயணத் திட்டம் கிடைக்கப் பெற்ற பிறகு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளிட்டோருக்கு தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றார் .
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G