
கோவை மாவட்டம், துடியலூர் அருகே 6 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சந்தோஷ் என்பவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தோஷ்குமாரை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, கஸ்தூரிநாயக்கன்புதூரைச் சேர்ந்தவர்கள் பிரதீப், வனிதா தம்பதி. இவர்களது இரண்டு பெண் குழந்தைகளில் 6 வயது பெண் குழந்தை திப்பனூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். 3 வயது பெண் குழந்தை அங்கன்வாடியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டின் முன்பு மார்ச் 25 ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளில் 6 வயது சிறுமி மாயமானதைக் கண்டு தாய் வனிதா அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து துடியலூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். இந்நிலையில், மாயமான சிறுமியின் சடலம் வீட்டின் அருகே துணி சுற்றப்பட்ட நிலையில் உடலில் காயங்களுடன் மார்ச் 26 ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் பிரேதப் பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கொலைக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி பாண்டியராஜனின் நேரடி மேற்பார்வையில் பெ.நா.பாளையம் டி.எஸ்.பி.க்கள் மணி, பாலமுருகன் ஆகியோர் தலைமையில் 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.
இந்தக் கொலை சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சிலரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலைக்கு காரணமானவர் தொண்டாமுத்தூர் அருகே உலியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் சந்தோஷ்குமார் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: சிறுமியைக் கொலை செய்த சந்தோஷ்குமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு கோமதி என்பவரைத் திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இவர் கஸ்தூரிநாயக்கன்புதூரில் உடல்நிலை சரியில்லாத பாட்டி ரங்கம்மாளைப் பார்க்க அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
அப்போது, பாட்டியின் வீட்டின் அருகே வசித்து வந்த 6 வயது சிறுமியை சம்பவத்தன்று பாட்டியின் வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தபோது சிறுமி இறந்துள்ளார். பின்னர் சிறுமி மாயமானதால் உறவினர்கள் கூட்டம் சேரவே அதிர்ச்சியடைந்த சந்தோஷ்குமார் சிறுமியின் சடலத்தை வீட்டுக்குள் பதுக்கி வைத்து காத்திருந்துள்ளார்.
அடுத்தநாள் அதிகாலை யாரும் இல்லாத நேரத்தில் தான் அணிந்திருந்த பனியனால் சிறுமியின் சடலத்தை மூடி வீட்டின் அருகே உள்ள சந்தில் போட்டுவிட்டு போலீஸாருடன் சேர்ந்து குழந்தையைத் தேடுவதுபோல் நடித்துள்ளார்.
அன்றைய தினமே சந்தோஷ்குமாரின் பாட்டியும் உயிரிழந்துள்ளார். பாட்டியின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு தொண்டாமுத்தூருக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையில், ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமாரின் செல்லிடப்பேசியை போலீஸார் ஆய்வு செய்தபோது குழந்தையுடன் சந்தோஷ்குமார் எடுத்திருந்த புகைப்படம் சிக்கியது. இதனால், சந்தேகமடைந்த தனிப்படை போலீஸார் சந்தோஷ்குமாரைப் பிடித்து விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார்.
மேலும் சம்பவத்தன்று சந்தோஷ்குமார் அணிந்திருந்த உடைகள், வீட்டில் கிடைத்தப் பொருள்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். கொலை செய்யப்பட்ட விதம் குறித்து அறிந்து கொள்ள விரைவில் அவரை கஸ்தூரிநாயக்கன்புதூருக்கு அழைத்துவர போலீஸார் திட்டமிட்டுள்ளனர். குற்றவாளி பிடிபட்ட தகவல் பரவியதால் அப்பகுதியில் பொதுமக்கள் குவியத் தொடங்கியதால் டி.எஸ்.பி. மணி தலைமையில் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G