மோடிக்கு துணை போனால் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்: தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் எச்சரிக்கை 

மோடிக்கு துணை போய்க் கொண்டிருந்தால் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று  தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மோடிக்கு துணை போனால் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்: தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் எச்சரிக்கை 

திருப்பூர்: மோடிக்கு துணை போய்க் கொண்டிருந்தால் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று  தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதனன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதன் விபரம் முழுவிவரம் பின்வருமாறு:

வருகின்ற 18ம் தேதி நடைபெறவிருக்கக்கூடிய நாடாளுமன்றத்தின் தேர்தல் என்பது மத்தியில் ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக நடைபெற இருக்கக்கூடிய தேர்தல். எனவே, அந்தத் தேர்தலில் நீங்கள் எல்லோரும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் நம்முடைய அன்பிற்கினிய சுப்பராயன் அவர்களுக்கு நீங்கள் எல்லோரும் கதிர் அரிவாள் சின்னத்தில், வாக்குகள் அளித்து வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று உங்களை நான் கேட்க வந்திருக்கின்றேன்.

திருப்பூர் அரசியல் திருப்பங்களுக்கு பெயர் பெற்ற ஊர். அதனால்தான் இதற்கு பெயரே திருப்பூர் என்று அமைந்திருக்கின்றது.  ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார், காஞ்சிபுரத்தில் பிறந்த அறிஞர் அண்ணா, இந்த இருவரையும் சந்திக்க வைத்த ஊர்தான் திருப்பூர். திருப்பூரில் அவர்கள் சந்தித்துக் கொண்ட காரணத்தினால் தான் "தமிழ் சமுதாயமே விடுதலை பெற்று இருக்கின்றது". தமிழனுக்கு சொரணை வந்தது - தமிழனுக்கு உணர்ச்சி வந்தது - தமிழன் தன்மானத்தோடு நடக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்தது, இந்தப் பெருமை மட்டுமல்ல, நம் தலைவர் கலைஞர் அவர்களை நாம் இவர்கள் மூலமாகத்தான் பெற்றிருக்கின்றோம்.

சட்டமன்றத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில், நம்முடைய சுப்பராயன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, திருப்பூர் மாவட்டத்திற்காக மட்டுமல்லாமல், கோவை மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல், தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த தொழிலாளர்கள் உரிமைக்காகவும் பல பிரச்னைகளுக்காகவும் குரல் எழுப்பிய நேரத்தில், அதைக்கூர்ந்து கவனித்து கேட்டு அத்தனை காரியங்களையும் முடித்துத் தந்தவர் தான் அன்றைக்கு முதல்வராக இருந்த நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

"ஓட்டு என்பது ஒரு ஓட்டு தான்". ஆனால், அது ஒரு ஓட்டு அல்ல, இந்த நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய ஓட்டு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இந்தியாவில், ஆட்சி மாற்றத்தை உருவாக்கித் தருவதற்கு அதன்மூலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த அக்கிரம ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு, உங்களின் பங்கை உங்கள் ஆதரவை நீங்கள் வழங்கிட வேண்டும். தேர்தல் நடத்தக்கூடிய ஆணையம் இன்றைக்கு சுதந்திரமாக செயல்படுகிறதா? என்றால் அது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது.

தான் நான்கு நாட்களுக்கு முன்பு நமது கழக பொருளாளர் அண்ணன் துரைமுருகன் வீட்டில் சோதனை. அவரின் அலுவலகத்தில் சோதனை, அவரது மகன் நடத்தக்கூடிய கல்லூரியில் சோதனை, என்று புறப்பட்டு காலை 8 மணியிலிருந்து மறுநாள் காலை 8 மணி வரை நடந்தது. அப்படி நடைபெற்ற சோதனையில் ஏதாவது கண்டுபிடித்தார்களா? தவறான காரியங்களில் ஈடுபட்டார்கள் என்று ஏதேனும் செய்திகள் வெளிவந்ததா? ஒருநாள் முழுவதும் சோதனையிட்டு இருக்கின்றார்கள். ஒரு நாள் முழுவதும் வேட்பாளராக இருக்கக்கூடிய நம் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் எங்கும் வாக்குகள் சேகரிக்க செல்ல முடியவில்லை. அதிகாரிகள், கேட்கின்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். எதுவும் இல்லை என்று சொல்லி போய் விட்டார்கள்.

ஒரு நாள் இடைவெளி விட்டு மீண்டும் அடுத்த தினம் வருகின்றார்கள். அப்பொழுது எங்கோ யாருடைய வீட்டிலோ பணத்தை பறிமுதல் செய்து விட்டதாகச் சொல்கிறார்கள். இப்பொழுது எங்களுக்கு வந்து கொண்டிருக்கக் கூடிய செய்தி, வேலூர் நாடாளுமன்ற தேர்தலை நிறுத்த வேண்டும் என்று இரண்டு நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தச் செய்தி வந்ததைப் பற்றி கூட நான் கவலைப்படவில்லை, இன்னொரு செய்தி ஒன்று வந்து கொண்டிருக்கின்றது. அது என்னவென்றால் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு நடைபெறக்கூடிய ஆம்பூர் மற்றும் குடியாத்தம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் சேர்த்து நிறுத்தப் போகின்றார்களாம். அதையும் சேர்த்து நிறுத்தினால் என்ன ஆகும்? தி.மு.க நிச்சயம் அந்தத் தொகுதிகளில் வெற்றி பெறப்போகிறது உறுதி. அதில் எந்த மாற்றமும் கிடையாது.

எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து 97 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இந்த 18லும் வெற்றி பெற்றுவிட்டால், 115 இடம் நமக்கு கிடைத்துவிடும். ஏற்கனவே தினகரன் அணியில் மூன்று நான்கு பேர் இருக்கின்றார்கள், அந்தக் கட்சிக்கு ஆதரவு தந்து கொண்டிருந்தவர்கள், இரண்டு பேர் விலகி இருக்கின்றார்கள். அதெல்லாம் பார்த்தால் அ.தி.மு.க-வின் நிலை 100 க்கு கீழ் வந்து விடுகின்றது. இந்த நிலையில் அவர்கள் ஆட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள் ஆகி விடுகின்றார்கள். எனவே, இதற்காகத்தான் திட்டமிட்டுச் செய்கின்றார்கள்.

குடியாத்தம் ஆம்பூர் மட்டுமில்லாமல், நெல்லை மாவட்டம் ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திக்குளம் ஆகிய இரண்டு தொகுதிகள். ஓட்டப்பிடாரம் வழக்கில் இருக்கின்றது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். விளாத்திகுளம் இந்த 18 தொகுதிகளில் இருக்கின்றது, விளாத்திகுளத்தில் தடுத்து நிறுத்த அனிதா ராதாகிருஷ்ணன் இடம் தேடிப் போனார்கள். கீதா ஜீவனிடமும் தேடிப்போய் இருக்கின்றார்கள். இவை அனைத்தும் திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கின்றது. எனவே, இந்த தேர்தல் கமிஷனை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, நீங்கள் மோடிக்கு துணை போய்க் கொண்டிருந்தால் பின்னால் வேறுவிதமான விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நிச்சயமாக வரும். நான் இதை மிரட்டுவதற்காக சொல்லவில்லை. ஜனநாயகத்தின் அடிப்படையில் சொல்லுகின்றேன்.

தென் மாநில மக்களுக்கு மட்டுமல்ல, வட மாநில மக்களுக்கு வேலை கொடுக்கின்ற ஊராக விளங்கிய ஊர் இந்த திருப்பூர். ஆனால், அந்த திருப்பூரின் நிலைமை ஒரு கவலைக்கிடமான சூழ்நிலைக்கு போய் இருக்கின்றதா? இல்லையா? அதற்கு காரணம் யார்? அதற்கு காரணம் ஒரே ஒருவர் தான் அவர் பெயர் தான் நரேந்திர மோடி. நீங்கள் மறந்திடக் கூடாது. நரேந்திர மோடியால் தான் திருப்பூர் தனது தொழில் செழிப்பை, பெருமையை, செல்வாக்கை, இழந்து நிற்கிறது.

2014ஆம் ஆண்டு மோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக இதே திருப்பூருக்கு வந்து என்ன சொன்னார்? திருப்பூர் வர்த்தகத்தை 1 லட்சம் கோடியாக உயர்த்துவேன் என்று சொன்னாரா? இல்லையா? அந்த உறுதிமொழியை அன்றைக்கு வழங்கினார். கடந்த பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி, இந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக இதே திருப்பூருக்கு நரேந்திர மோடி அவர்கள் வந்தார். 10 நிமிடம் தான் அரசு விழாவில் கலந்து கொண்டார். 10 நிமிடத்தில் அரசு விழாவை முடித்து விட்டு பி.ஜே.பி கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டார். அந்தத் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் என்ன பேசினார்? நான் ஏற்கனவே ஒரு உறுதிமொழி தந்து இருந்தேன். அந்த உறுதிமொழியை நான் காப்பாற்றி இருக்கின்றேன் என்று சொன்னார். 1 இலட்சம் கோடியாக மாற்றி விட்டேன் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்ல முடிந்ததா? 5 ஆண்டுகளுக்கு முன்னால் நான் திருப்பூர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று அவரால் சொல்லமுடியவில்லை.

2011ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 08ம் தேதி மோடி அவர்கள் பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்ற அறிவிப்பை வெளியிட்டார். அப்படி நடவடிக்கை எடுத்த காரணத்தினால் திருப்பூர் வர்த்தகம் எந்த அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்தது என்பது உங்களுக்குத் தெரியும். வர்த்தகத்தை அடிப்படையாக வைத்துதான் சிறு குறு தொழிலாளர்கள் தொழில் செய்து வருகின்றார்கள். அவர்களை நம்பித்தான் தொழிலாளர்கள் இருந்தார்கள். அவர்களை நம்பித்தான் சிறு சிறு வணிகர்கள் வியாபாரிகள் இருந்தார்கள். அவர்களை நம்பித்தான் லட்சக்கணக்கான குடும்பங்கள் இருந்தன. ஆனால், இன்றைக்கு ஒருவர் இவை அனைத்தையும் ஒரே இரவில் சிதைத்து விட்டார். சிதைத்தவர் யார் என்று கேட்டால், நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். பிரதமராக இருக்கக்கூடிய மோடிதான் அதற்கு முழுக்காரணம்.

வேலை இல்லை என்று தொழிலாளர்கள் ஒருபுறம் தற்கொலை செய்து மாண்டு கொண்டிருக்கின்றார்கள். வேலையே செய்ய முடியவில்லை என்று தொழில் முனைவோர் ஆங்காங்கு தற்கொலை செய்து கொள்வதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பதற்காக மட்டுமே, இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கின்றது. அப்படிப்பட்ட ஆட்சியை மோடி நடத்திக் கொண்டிருக்கின்றார்.

ஜி.எஸ்.டி என்னும் கொடுமையான வரிகளை விதித்து சிறு குறு நிறுவனங்கள் அனைத்தையும் அடக்கியவர் மோடி அவர்கள்.

பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலைகளை உயர்த்தி நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றில் அடித்தவர்தான் மோடி அவர்கள்.

சிறுபான்மையினர் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்தவர்தான் மோடி அவர்கள். எனவே, இப்படி தொடர்ந்து நான் பட்டியல் போட்டுச் சொல்ல முடியும்.

இப்பொழுது இந்தத் தேர்தலில் நேற்று காலையிலும், இன்று காலை பத்திரிக்கைகளில் பார்த்திருக்கலாம், தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம். முதலமைச்சர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பிரச்சாரம் செய்கின்றபொழுது அவர் மீது வந்து ஒரு செருப்பு விழுகின்றது. நல்ல வேளை அவர் மீது படவில்லை. அவர் அருகில் இருந்த வைத்தியலிங்கத்தின் மீது பட்டிருக்கின்றது. எறிந்தது யார் பொதுமக்கள் அல்ல, அரசியல் ரீதியாக அல்ல அ.தி.மு.க-வைச் சேர்ந்த வேல்முருகன் என்ற ஒரு தோழர். அவர் முதலமைச்சர் மீது செருப்பை வீசி இருக்கின்றார், எனவே அ.தி.மு.க-வின் மீது அ.தி.மு.க-வைச் சார்ந்த தோழருக்கே இன்றைக்கு வெறுப்பு வந்து இருக்கின்றது என்றால், அதுதானே இன்றைக்கு மக்களிடத்திலும் இருக்கின்றது.

நிலமற்ற ஏழை விவசாயிகள் தங்கள் குடும்ப செலவுக்காக மூக்குத்தி, கம்மல், தாலி செயின் போன்ற ஆபரணங்கள் பல ஆண்டுகளாக மீட்கப்படாமல் கூட்டுறவு வங்கி பொதுத்துறை வங்கிகளில் அடமானத்தில் இருக்கின்றது. ஒரு கிராம் முதல் 5 பவுன் வரையில் அடமானத்தில் இருக்கும் நகைகளுக்கான கடனை தள்ளுபடி செய்தால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றார்கள். எனவே, இந்தக் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அறிக்கையில் இணைக்கப் போகின்றோம் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com