
2019 கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்ட திருவாரூர் இடைத் தேர்தலை, கம்யூனிஸ்ட் கட்சி மூலம் நிறுத்தி வைத்தது திமுகவே என்று அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் குற்றம் சாட்டினார்.
திருவாரூரில் நாகை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் டி. செங்கொடி, திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் எஸ். காமராஜ் ஆகியோரை ஆதரித்து புதன்கிழமை அவர் பேசியது: தமிழகத்தில் நடைபெறவுள்ள 22 சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் என்பது ஒரு சிறிய சட்டப் பேரவைத் தேர்தலைப் போன்றது. தமிழகத்தை பல்வேறு வகையில் வஞ்சித்த பிரதமர் மோடியுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக ஒரு துரோகக் கும்பல். காலம் தாழ்த்தாமல் அவர்களை அகற்ற வேண்டும்.
2014-இல் ஜெயலலிதா யாருடன் (பாஜக) கூட்டணி வேண்டாம் என்று தெரிவித்தாரோ அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பதன் மூலம் அதிமுகவினர் துரோகம் இழைத்துள்ளனர். தமிழகத்தில் கஜா புயல் வீசியபோது மோடி வரவில்லை. கேட்ட நிதியையும் தரவில்லை. ஆனால், தேர்தல் அறிவித்தவுடன் அடிக்கடி வந்து செல்கிறார்.
ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட பாமகவும், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைக்க தேமுதிகவும் எதிர்ப்பு தெரிவித்தது. இவர்களுடனும் அதிமுக, கூட்டணி வைத்துள்ளது. கஜா புயல் வீசியபோது, மக்களைப் பார்க்க ஹெலிகாப்டரில் வந்தார் முதல்வர், இப்போது வாக்குச் சேகரிக்க ஹெலிகாப்டரில் வரவேண்டியது தானே ? அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அமமுக பக்கமே உள்ளனர். இதனால், திருவாரூரில் அதிமுக வெற்றி பெறாது. திருவாரூரில் திமுக வெற்றி பெற வேண்டும் என மறைமுகமாக அதிமுக பாடுபடுவதாக ஒரு தகவல் உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக திமுக மக்களை ஏமாற்றி வருகிறது. இந்த தேர்தலில் திமுக வெற்றிபெற போவதில்லை. எனவே, சில தொலைக்காட்சிகளில் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். ஜனவரியில் அறிவிக்கப்பட்ட திருவாரூர் இடைத் தேர்தலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் து. ராஜாவின் மூலம் நிறுத்த வைத்தது திமுகவே. இரண்டு மாதங்கள் மட்டுமே தள்ளி வைக்க முடிந்தது. தற்போது தேர்தலை சந்தித்து தானே ஆகவேண்டும். இந்துக்களுக்கு எதிரிகள் அல்ல என்கிறது திமுக. மதம், ஜாதி பற்றி அரசியல்வாதிகள் பேசக்கூடாது.
வறுமையை ஒழிப்பது, குடிநீர் பிரச்னை, பாசன வசதி, மக்கள் தன்னிறைவைப் பெறத் திட்டங்கள், வேலை வாய்ப்பை உருவாக்குவது, நீட் பிரச்னை என எவ்வளவோ பிரச்னைகள், பேசுவதற்கு உள்ளன. திருவாரூரில் போக்குவரத்து நெரிசலை போக்க, புறவழிச்சாலை அமைக்கப்படும். நுகர்பொருள் வாணிபக்கிடங்கு நவீனமயமாக்கப்படும், ஓடம்போக்கி ஆறு தூர்வாரப்படும், வடபாதிமங்கலத்தில் விவசாயப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும், புதிய மாற்றத்தை உருவாக்க, மக்கள் அமமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் டிடிவி. தினகரன்.
திருத்துறைப்பூண்டியில்... கம்யூனிஸ்ட் கட்சியால் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை
திருத்துறைப்பூண்டி, ஏப்.10: திருத்துறைப்பூண்டியில் அமமுக நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளர் செங்கொடியை ஆதரித்து டிடிவி. தினகரன் பேசியது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்சநீதிமன்றம் வரை சென்று இறுதித் தீர்ப்பை பெற்று அதை மத்திய அரசிதழில் வெளியிட செய்து டெல்டா விவசாயிகளை காப்பாற்றியவர். பொதுவுடைமை இயக்கத்தினர் தன்நலம் கருதாத தியாகிகள். ஆனால், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க மக்கள் நலக் கூட்டணி அமைத்தவர்கள் தற்போது கொள்கைகளை விட்டுவிட்டு ஒன்றிரண்டு சீட்டுகளுக்காக அல்லாடிக் கொண்டிருப்பது வேதனையாக உள்ளது.
கம்யூனிஸ்ட் மக்களவை மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் இந்த பகுதியின் வளர்ச்சிக்காக எதையுமே செய்யாமல் தொகுதி மேம்பாட்டு நிதியை பெறுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர். இதனால், இப்பகுதி வளர்ச்சி அடையாமல் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. அமமுக வேட்பாளரின் பெயர் செங்கொடி. கஜா புயலின்போது புயல்பாதித்த பகுதிகளில் செங்கொடி தோழர்களையே காணவில்லை. மக்கள் உணவுக்காக கையேந்தியபோது இவர்கள் எங்கு சென்றார்கள் எனத் தெரியவில்லை. தமிழகத்துக்கு துரோகம் இழைத்து நீட் தேர்வு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவைகளால் தமிழகத்தை பாலைவனமாக மாற்ற நினைக்கும் மோடியுடன் கூட்டணி வைத்துள்ளது அதிமுக. திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளன.
இக்கட்சிகளை புறந்தள்ளி உண்மை விசுவாசிகள் நிறைந்த அமமுக வேட்பாளர்களை மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் வெற்றி பெற பரிசுப் பெட்டகம் சின்னத்துக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் டிடிவி. தினகரன். அப்போது, அக்கட்சியின் மாநில அமைப்பு செயலர்கள் மன்னை சிவா. ராஜமாணிக்கம், ரெங்கசாமி, மாநிலத் தேர்தல் பிரிவுச் செயலர் மலர்வேந்தன், மாவட்டச் செயலரும், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளருமான எஸ். காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அந்த மூன்று நிமிடங்கள்....
அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், நாகை அவுரித் திடலில் புதன்கிழமை இரவு 9 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, இரவு 7 மணி முதலே பெண்கள் உள்பட திரளானோர் அவுரித் திடலில் குழுமியிருந்தனர். இரவு 9.45 மணி அளவில், அமுமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்னும் ஒரு சில நிமிடங்களில் வருவார் என அறிவிக்கப்பட்டு, ஒலிப்பெருக்கி அணைத்து வைக்கப்பட்டது. இரவு 10 மணியைக் கடந்தபோது, தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, டி.டி.வி. தினகரன் நாகையில் உரையாற்ற வாய்ப்பில்லை என்பது உறுதியானது. இருப்பினும், வழக்கை சந்திக்கும் திட்டத்துடன் அவர் பேசுவாரா? அல்லது கட்சி சின்னத்தை உயர்த்திக் காட்டுவாரா? என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன.
இந்த நிலையில், இரவு 10.15 மணிக்கு நாகை அவுரித் திடலுக்கு வந்த டி.டி.வி. தினகரன், தனது பிரசார வாகனத்தில் இருந்தவாறே, கூடியிருந்த மக்களை நோக்கி கரம் கூப்பியும், கை அசைத்தும் மெளனமாக வணக்கம் தெரிவித்தார். நாகை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் த. செங்கொடி உடனிருந்து, வாக்குச் சேகரிக்கும் வகையில் மக்களை நோக்கி, கரம் கூப்பினார். இதனிடையே, ஒரு சில தொண்டர்கள் அமமுகவின் சின்னமான பரிசுப் பெட்டியை, டி.டி.வி. தினகரனுக்கு வழங்கினர். பின்னர், பிரசார வாகனத்தின் மேல்தளத்திலிருந்து கீழே இறங்கிய அவர், கதவை திறந்து விட்டு, பிரசார வாகனத்தின் படியில் ஒரு சில விநாடிகள் நின்றார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டார். இரவு 10.15 மணிக்கு நாகை அவுரித் திடல் பகுதிக்கு வந்த அவர், இரவு 10.18 மணிக்கு அவுரித் திடலிருந்து வெளியேறினார்.