
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதான 4 பேர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாநில அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், சபரிராஜன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய அந்தச் சம்பவம் குறித்து தமிழக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரவு உள்ளிட்ட 4 பேரும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாநில அறிவுரைக் கழகத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதற்காக அவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கழகத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ராமன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும், மீண்டும் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.