
கடுமையான வறட்சியிலும் கூட பெரம்பலூர் மக்களவைத் தொகுதி முழுக்க வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ளம் என்றால் சாதாரண வெள்ளமல்ல, வேட்பாளர்களின் வாக்குறுதிகளால் நிரம்பிய வெள்ளம்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தருக்கும், அதிமுக வேட்பாளர் சிவபாதிக்கும் இடையேதான் இங்கு கடும் போட்டி நிலவுகிறது.
அதிமுக வேட்பாளர் சிவபாதி அளித்திருக்கும் வாக்குறுதியில், ஒருங்கிணைக்கப்பட்ட காவேரி குடிநீர் திட்டத்தால் திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு குடிநீர் கொண்டு வரப்படும்.
இப்பகுதிக்கு அரியலூரில் இருந்து நாமக்கல் வழியாக பெரம்பலூருக்கு ரயில் வழித்தடம் அமைக்கப்படும்.
பெரம்பலூரில் ஒரு மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.
மறுபக்கம் பாரிவேந்தரோ, பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து ஆண்டு தோறும் 300 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு தனது எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் இலவசமாக கல்வி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 500 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
இது எல்லாமே, அரசின் நிதியுதவி இல்லாமல், தனது சொந்த செலவிலேயே செய்யத் தக்க வாக்குறுதிகளாக இருப்பதால், இவை பொதுமக்களை எளிதில் கவர்ந்துள்ளது.
அதோடு, எஸ்ஆர்எம் சார்பில் இந்த தொகுதியில் 5 சுகாதார மையங்கள் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதோடு, திமுக சின்னத்தில் அவர் போட்டியிடுவதும், அவருக்கு பக்கபலமாக உள்ளது. திமுக தலைவர் கருணாநிதி முதல் முறையாக தேர்தலை சந்தித்தது இந்த தொகுதிக்கு உட்பட்ட குளித்தலையில் இருந்துதான்.
கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாரிவேந்தர் 2,38,887 வாக்குகளைப் பெற்றிருந்தார். இரண்டாம் இடம் பிடித்த திமுக வேட்பாளரே 2,49,645 வாக்குகளைத்தான் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா இந்த தேர்தலில் 4,62,693 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தரப்பிலோ, பாரிவேந்தர் வெளியாள். சிவபாதி உள்ளூர் ஆள் என்று வாதிடுகிறார்கள். ஆனால் பாரிவேந்தரோ, தான் இந்த தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானால், நிச்சயம் இந்த பகுதிக்கு தனது வீட்டை மாற்றிக் கொள்வேன் என்று பதிலடி கொடுக்கிறார்.
எப்படியோ இத்தனை வாக்குறுதிகளையும் பார்த்து பொதுமக்கள்தான் முடிவு செய்ய வேண்டும், தங்களது பிரதிநிதிகளாக யார் நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்பதை.