
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் உதவியாளராக இருந்த சாதிக் பாட்ஷா தற்கொலை விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வியாழக்கிழமை மனு அளித்துள்ளதாக சாதிக் பாட்ஷாவின் மனைவி ரேகா பானு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது கணவரின் நினைவுநாளன்று, கூடா நட்பு கேடாய் முடியும் என்ற தலைப்பில் நாளேடுகளில் விளம்பரம் அளித்திருந்தேன். இதைத் தொடர்ந்து, என்னுடைய கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதை திமுகவினர் செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது. எனது கணவர் சாதிக் பாட்ஷா, 2ஜி வழக்கில் சாட்சியாக இருந்தவர். திமுக தலைவர் ஒரு முக்கிய நபரைச் சந்தித்ததாகத் தெரிவித்திருந்தார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் எனது கணவர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பார் என்ற சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக விசாரிக்குமாறு குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.