
தமிழ்நாட்டில் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஒரே இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என அந்தக் கட்சித் தலைவர் டி.டி.வி தினகரன் கூறினார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஆ.இளவரசனை ஆதரித்து சிதம்பரம் காந்தி சிலை அருகே டி.டி.வி தினகரன் வியாழக்கிழமை இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி மற்றும் மத்தியில் பிரதமர் மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெறுகிறது. இதில் ஒரு தொகுதியில் கூட எடப்பாடி பழனிசாமி கட்சி வெற்றி பெற முடியாது.
இந்தியாவை உலக வல்லரசாக மாற்றுவேன் என்றார் பிரதமர் மோடி. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. இதற்கு முன்பு மத்தியில் 10 ஆண்டுகள் நடைபெற்ற மன்மோகன்சிங் அரசு மற்றும் திமுக மீதான வெறுப்பினாலேயே கடந்த தேர்தலில் மோடி வெற்றி பெற்றார். ஆனால், அப்போதும் தமிழக மக்கள் யாரிடமும் ஏமாறாமல் ஜெயலலிதாவுக்கு வாக்களித்தார்கள். அதனால்தான், ஜெயலலிதா நீட் தேர்வை தடுத்து நிறுத்தினார். அவரது மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நீட் தேர்வை பிரதமர் மோடி கொண்டு வந்தார். எடப்பாடி பழனிசாமி அரசு அதற்கு அனுமதி அளித்தது.
மோடி எப்படி இந்து மதத்தின் பாதுகாவலர் எனக் கூறிக்கொண்டு மக்களை பிரித்தாளுகிறாரோ, அதேபோல மு.க.ஸ்டாலின் சிறுபான்மையினரின் பாதுகாவலர் எனக் கூறி ஏமாற்றப் பார்க்கிறார். சிறுபான்மை மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. பிரித்தாள முடியாது என ஆர்.கே. நகர் தேர்தலில் திமுகவை டெபாசிட் இழக்கச் செய்தனர். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இளவரசன் நல்லவர், பண்பாளர். சாதி, மதக் கலவரங்களை உருவாக்க மாட்டார். அவரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் இந்தத் தொகுதி அமைதிப் பூங்காவாக விளங்கும். சாதி, மதத்தைப் பற்றி பேசுபவர்களைப் புறந்தள்ளுங்கள். தெய்வ வழிபாடு என்பது அவரவரின் விருப்பம். அதனை இழித்துப் பேசுவதை அனுமதிக்கக் கூடாது.
மதச் சார்பற்ற கூட்டணி என்று கூறிய மு.க.ஸ்டாலின், தற்போது நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல என்கிறார்.
ஓர் அரசியல் இயக்கம் ஆட்சிக்குவர வேண்டும் என்றால் அனைத்து சமுதாய மக்களும், அனைத்து மதத்தினரும் வாக்களித்து வந்தால்தான் அது சிறந்த ஆட்சியாக இருக்கும். யாரோ ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் அந்த தொகுதிக்கும், நாட்டுக்கும் பலன் இல்லை என்றார் அவர்.