
தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் 6 லட்சத்து 74 ஆயிரத்து 122 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, மாநிலத்தில் மொத்தமுள்ள ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 ஆகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 765 ஆகவும் இருந்தது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் வரையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 8 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருந்தன. தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு இப்போது துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
எத்தனை வாக்காளர்கள்: மாநிலத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 ஆக உள்ளது. அதில், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 45 ஆகவும், ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923 ஆகவும், மூன்றாம் பாலித்தனவர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 790 ஆகவும் உள்ளது. அதன்படி, கடந்த இரண்டு மாதங்களுக்குள் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 74 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது.
எந்த மாவட்டத்தில் அதிகம்: தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக சென்னை மாவட்டம் திகழ்கிறது. அங்கு 38 லட்சத்து 66 ஆயிரத்து 66 வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் தமிழகத்தில் முதலிடம் சென்னைக்குத்தான். இங்கு 19 லட்சத்து 59 ஆயிரத்து 862 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 லட்சத்து 485 பெண் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 60 ஆயிரத்து 771 ஆக உள்ளது.