
மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துக் கூடாது என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ரிபாயுதீனை ஆதரித்து, மயிலாடுதுறையில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் வியாழக்கிழமை பேசியது:
காவிரி டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். கதிராமங்கலம் கிராமத்தில் இத்திட்டத்தை எதிர்த்து, பொதுமக்கள் நடத்திவரும் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. மண்ணையும், மக்களையும் அழித்து, மக்கள் விரும்பாத எந்தத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தக் கூடாது. மயிலாடுதுறை தொகுதி மக்களின் அனைத்துப் பிரச்னைகளையும் என்னிடம் கூறியுள்ளனர். மக்களில் ஒருவராக இருக்கக் கூடிய வேட்பாளர் ரிபாயுதீன் வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்றால்தான் மக்களின் குறைகளைத் தீர்க்க முடியும். தமிழகத்தை, இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும். அதற்கு ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைய வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமான டார்ச்லைட் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், அதன் வெளிச்சத்தில் மக்கள் பயன் பெற்று வெளியில் வந்துவிட்டார்கள். மக்கள் உடனான நேரடி தொடர்பு அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டும். ஆனால், தற்போது உள்ள அரசியல்வாதிகளுக்கு மக்களுடனான தொடர்பு அற்றுப்போய் விட்டது. ஆனால், நான் எப்போதும் உங்களின் ஒருவனாக இருப்பேன் என்றார் அவர். முன்னதாக, பிரசாரத்தின்போது, தொண்டர் ஒருவரின் பெண் குழந்தைக்கு ஆராதனா என்று கமல்ஹாசன் பெயர் சூட்டினார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G