
வருமானவரி சோதனை நடத்தப்பட்ட வங்கியின் பணம் இருப்புக் கிடங்கு.
திமுக பொருளாளர் துரைமுருகனின் ஆதரவாளர் வீட்டில் இருந்து ரூ. 11.48 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் அந்தப் பணம் வழங்கப்பட்ட வங்கிக் கிளை மேலாளர் வீடு, பணம் இருப்புக் கிடங்கில் வருமானவரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர்ஆனந்த் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவரது வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 29-ஆம் தேதி நடத்திய சோதனையில், கதிர்ஆனந்த் வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்த கையிருப்பு ரொக்கத்தைவிட கூடுதலாக வைத்திருந்த ரூ. 10.57 லட்சம் கைப்பற்றப்பட்டது. மேலும், கடந்த 1-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் உள்ள திமுக பிரமுகர் தாமோதரன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ. 11.48 கோடி கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்டத் தேர்தல் செலவினக் கண்காணிப்பு அலுவலர் அளித்த புகாரை அடுத்து காட்பாடி நீதித் துறை நடுவர் ஆலோசனையின் பேரில் கதிர்ஆனந்த், அவரது ஆதரவாளர்கள் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது காட்பாடி போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
பிடிபட்ட ரூ. 11.48 கோடி பெரும்பாலும் ரூ. 200 கட்டுகளாக இருந்ததும், அந்தப் பணக்கட்டுகளின் வரிசை எண்களைக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அந்தத் தொகை வேலூரிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் இருந்து வழங்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, காட்பாடி காந்தி நகர் 4-ஆவது கிழக்கு குறுக்குத் தெருவில் உள்ள அந்த வங்கிக் கிளை மேலாளர் தயாநிதி வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். மேலும், காந்தி நகர் பகுதியில் உள்ள அந்த வங்கிக்குச் சொந்தமான பணம் இருப்புக் கிடங்கிலும் சோதனை நடத்தப்பட்டது.
பல மணி நேரம் நடந்த இந்தச் சோதனையில், கைப்பற்றப்பட்ட தொகை, யார் யார் வங்கிக் கணக்கில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இவ்வளவு அதிகப்படியான தொகை, அதுவும் ரூ. 200 கட்டுகளாகக் கொடுக்கப்பட்டதன் பின்னணி குறித்தும் வங்கி மேலாளர் தயாநிதியிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. எனினும், இந்தச் சோதனை குறித்த விவரங்களை வருமானவரித் துறை அதிகாரிகள் வெளியிடவில்லை.