
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக, வேலூரில் 107 டிகிரி வெப்பநிலை பதிவானது.
திருத்தணி, கரூர்பரமத்தியில் தலா 106 டிகிரியும், சேலம், திருச்சியில் தலா 105 டிகிரியும், தருமபுரி, மதுரை தெற்கு, மதுரை விமான நிலையம், நாமக்கலில் தலா 104 டிகிரியும், பாளையங்கோட்டையில் 103 டிகிரியும், கோயம்புத்தூரில் 102 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் சில இடங்களில் புதன்கிழமை (ஏப்.17) வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.
தெற்கு உள் கர்நாடகத்தில் இருந்து உள் தமிழகம் வழியாக குமரிக்கடல் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஏப்.17) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் காலை வேளையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதன்பிறகு, வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 96 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்றார் அவர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...