ஆண்டிபட்டியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு

ஆண்டிபட்டி அமமுக தேர்தல் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை, செவ்வாய்க்கிழமை இரவு தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்ததை
ஆண்டிபட்டியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு
Updated on
1 min read

ஆண்டிபட்டி அமமுக தேர்தல் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை, செவ்வாய்க்கிழமை இரவு தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்ததை தொண்டர்கள் தடுத்ததால், கூட்டத்தை கலைப்பதற்காக போலீஸார் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டனர்.
 ஆண்டிபட்டி பழைய தீயணைப்பு நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில், அமமுக தேர்தல் அலுவலகம் உள்ளது. இந்த தேர்தல் அலுவலகத்தில், அமமுக சார்பில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், தேர்தல் பறக்கும் படை குழுவினர் அமமுக தேர்தல் அலுவலகத்துக்குள் புகுந்து சோதனையிட்டதில், அங்கு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
 இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் ம. பல்லவி பல்தேவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச. கந்தசாமி ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.
 இதையடுத்து, அமமுக தேர்தல் அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ய முயன்றபோது, அங்கிருந்த அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களில் சிலர் தடுத்துள்ளனர்.
 மேலும் பல தொண்டர்கள் தேர்தல் அலுவலகம் முன்புள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கட்சி நிர்வாகிகளில் சிலர், தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்ற பணத்தின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
 வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு: இது குறித்து தேர்தல் பறக்கும் படை குழு அளித்த தகவலின்பேரில், ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன், தேனி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் கணபதி, ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் பாலகுரு மற்றும் போலீஸார், அமமுக அலுவலகத்துக்குச் சென்றனர்.
 அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின்பேரில், போலீஸார் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
 தடியடி: இந்நிலையில், அமமுக தேர்தல் அலுவலகம் முன்பு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் கூடிய அமமுகவினர்,பொதுமக்களைக் கலைப்பதற்காக போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
 இந்த சம்பவம் தொடர்பாக அமமுக முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் பங்கஜம் பழனி உள்பட அக் கட்சி நிர்வாகிகள் 4 பேரை, ஆண்டிபட்டி போலீஸார் கைது செய்தனர்.
 இதையடுத்து, அமமுக தேர்தல் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்து மதிப்பீடு செய்து வருகின்றனர்.
 இச்சம்பவத்தைத் தொடர்ந்தது, ஆண்டிபட்டியில் பதற்றம் நிலவுவதால் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com