
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும், வாக்காளர்கள் காலை 7 மணி முதல் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்றும் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் சத்யபிரதா சாகு செயல்முறை விளக்கம் அளித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், மாவட்ட தேர்தல் அதிகாரிக்குக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில்தான் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். அதற்கு முன் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். 2 மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரம் தெரிவிக்கப்படும்.
பணம் பறிமுதல செய்யப்பட்ட விவகாரங்களில் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வரை 4,400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் அடிப்படையில்தான் சோதனை நடத்தப்படுகிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடுதான் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மதுரை நீங்கலாக அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மாலை 6 மணிக்குள் வருவோருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மதுரையில் இரவு 8 மணிக்குள் வருவோருக்கு டோக்கன் தரப்பட்டு எவ்வளவு நேரம் ஆனாலும் வாக்குப்பதிவு நடைபெறும்.
ஆண்டிப்பட்டி வருமான வரிச்சோதனை குறித்து விரிவான அறிக்கை தரப்படவில்லை என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...