
சென்னை: தமிழக மக்களின் தற்போதைய ஒரே கேள்வி மழை வருமா? வராதா? என்பதுதான். கடும் கோடையில் இதென்ன கேள்வி என்று கேட்கக் கூடாது.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமே இந்த கேள்வி எழக் காரணமாக உள்ளது.
சரி நேராக விஷயத்துக்கு வருவோம். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று சற்று நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்துக்கு வடமேற்கே 1,500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகவும், பிறகு புயலாகவும மாறக்கூடும். தற்போதைய நிலவரப்படி வட மேற்கு திசையில் நகர்ந்து ஏப்ரல் 30ம் தேதி வட தமிழகத்தின் கடற்பகுதிக்கு அருகே வரக் கூடும்.
இதன் காரணமாக 26, 27ம் தேதிகளில் தென்கிழிக்கு வங்கக் கடல் பகுதிக்கும், 28 முதல் 30 வரை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தற்போதைய நிலவரப்படி, வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த கன மழைக்கான வாய்ப்பு புயலின் நகர்வைப் பொறுத்து மாறும். தற்போதைய நிலவரப்படி புயலின் நகர்வைப் பொறுத்து இதில் மாற்றங்கள் நிகழலாம்.
ஏப்ரல் 30ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது
எனினும், தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வைப் பொறுத்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சுற்றியிருக்கும் வளிமண்டலங்களில் இருக்கும் மாற்றங்கள், நகர்வை பொறுத்துதான் காற்றின் வேகமோ மழையோ இருக்கும் என்று பதிலளித்தார்.