கல்லூரிகளில் வாக்கு எண்ணும் மையங்கள்: மாணவர் சேர்க்கை நடைமுறைகள் பாதிக்காது

கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களால் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட எந்த வழக்கமான நடைமுறைகளும் பாதிக்கப்படாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி
கல்லூரிகளில் வாக்கு எண்ணும் மையங்கள்: மாணவர் சேர்க்கை நடைமுறைகள் பாதிக்காது

கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களால் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட எந்த வழக்கமான நடைமுறைகளும் பாதிக்கப்படாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி அளித்துள்ளார். 
இதற்கான மாற்று ஏற்பாடுகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:
 தமிழகத்தில் கடந்த 18-ஆம் தேதி பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 45 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஒட்டிய பகுதி முதல் அடுக்காகும். அதில், ஒரு மையத்துக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை வீரர்கள் என்ற அளவில், தமிழகம் முழுவதும் 988 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டாம் அடுக்கு என்பது, இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு வெளியே உள்ள பகுதியாகும். அங்கு தமிழகத்தைச் சேர்ந்த சிறப்புக் காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள். ஒரு மையத்துக்கு சுமார் 40 பேர் என்ற வகையில், மாநிலம் முழுவதும் 1,522 போலீஸார் பாதுகாப்பில் இருந்து வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகம் என்பது மூன்றாவது அடுக்காகும். அதில் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு மையத்துக்கு 40 பேர் என்ற வகையில் 1,589 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள். இவற்றை ஒருங்கிணைக்கும் பணயில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அல்லது துணை கண்காணிப்பாளர் 2 அல்லது 3 பேர் என மொத்தம் 80 பேர் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
நான்காவது அடுக்கில், ஒரு மையத்துக்கு 84 பேர் என்ற அளவில், தமிழகம் முழுவதும் சட்டம், ஒழுங்கு பிரிவு காவலர்கள் 3,768 பேர் பணியில் உள்ளனர். இது வாக்கு எண்ணும் மையத்தின் வளாகத்தை ஒட்டிய பகுதியாக இருக்கும். அதன்படி, வாக்கு எண்ணும் மையங்களில் தமிழகம் முழுவதும் மொத்தம் 7 ஆயிரத்து 922 பேர் தற்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தவும் வாய்ப்புள்ளது. வாக்கு எண்ணும் தேதியன்று பாதுகாப்புக்காக இன்னும் அதிகமாக பாதுகாப்பு அளிக்கப்படும். 
24 மணி நேரமும் கண்காணிக்கலாம்: வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிப்பர். 24 மணிநேரமும் அவர்களால் அதை பார்க்க முடியும்.
கோரிக்கை விடுக்கும் நிலையில், அரசியல் கட்சி முகவர்களை, மாவட்ட தேர்தல் அதிகாரி அழைத்துச் சென்று அந்த அறைகளை வெளியில் இருந்து பார்வையிடச் செய்வார். தேர்தல் நடத்தும் அதிகாரி (ஆர்.ஓ.), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தினமும் அங்கு வந்து பார்வையிடுவார்கள்.
ஒரு மையத்துக்கு சுமார் 30 முதல் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அறைகளுக்கு மட்டும் அல்லாமல் மையத்தின் சுற்றுப்புறங்களிலும் அவை பொருத்தப்பட்டுள்ளன. கோவையில் அரைநாள் மட்டும் அந்த கேமராக்கள் வேலை செய்யாமல் இருந்ததாக புகார்கள் வந்தன. அவை சரிசெய்யப்பட்டுவிட்டன.
வாக்கு எண்ணிக்கை மையங்களில், இடையூறு இல்லாதபடி மாணவர்கள் சேர்க்கைக்கு வசதிகளை செய்துதரக் கோரியிருந்தனர். அதற்கு மாற்று வசதிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். 
மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்குள் பெண் அதிகாரி சென்ற சம்பவம் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com