
ஜாதி, மத வேற்றுமைகளை மறந்து மனிதநேயம் வளர்க்க வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உலக அரங்கில் மாறி வருகின்ற அரசியல் சூழ்நிலைகள் கவலை அளிக்கின்றன. மனித உரிமைகளை வலியுறுத்தும் ஐரோப்பாவின் பல நாடுகளில், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் வெள்ளை இனவெறியை வளர்க்கும் வலதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்து இருக்கின்றன. அங்கேயும் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்ற சூழ்நிலைகள் உருவாகி இருக்கின்றன.
இந்தியாவில் ஆர்எஸ்எஸ், சங் பரிவாரின் வழிகாட்டுதலோடு சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளை பாஜக அவிழ்த்து விட்டிருக்கிறது. அதனால், ஐ.எஸ். போன்ற வன்முறை இயக்கங்கள், இந்தியாவிலும் தாக்குதல் நடத்தும் சூழல் உருவாகி இருக்கிறது. தமிழகத்திலும் ஜாதி, மதவெறிப் பேச்சுகள் பெருகி வருகின்றன. சமூக ஊடகங்களிலும் அத்தகைய கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் அதற்கு பலியாகி விடக் கூடாது. எனவே, வேற்றுமைகளை மறந்து மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் என்று தனது அறிக்கையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.