ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற கட்டுப்பாடு: விசைத்தறியாளர்கள் தவிப்பு

கடந்த 2017-18ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி கணக்கை பூஜ்ஜியமாக்க 18 சதவீத வட்டி கட்ட வேண்டும் என்ற ஜிஎஸ்டி கவுன்சில் உத்தரவால் விசைத்தறியாளர்கள் கூடுதல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். 
ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற கட்டுப்பாடு: விசைத்தறியாளர்கள் தவிப்பு

கடந்த 2017-18ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி கணக்கை பூஜ்ஜியமாக்க 18 சதவீத வட்டி கட்ட வேண்டும் என்ற ஜிஎஸ்டி கவுன்சில் உத்தரவால் விசைத்தறியாளர்கள் கூடுதல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

ஈரோடு சுற்று வட்டாரத்தில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், சூளை, மாணிக்கம்பாளையம், லக்காபுரம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்குகின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பின் விசைத்தறியாளர்கள் ஜிஎஸ்டி வரியைச் செலுத்தி வருகின்றனர்.  இதில் கடந்த 2017-18ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரியில் 5 சதவீதம் பிடித்தம் போக மீதம் உள்ள தொகையை 90 சதவீத விசைத்தறியாளர்கள் திரும்பப் பெறாமல் உள்ளனர். 

இந்நிலையில் 2017-18ஆம் ஆண்டு ஜிஎஸ்டி கணக்கை பூஜ்ஜியமாக்கினால் மட்டுமே 2018-19ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரியில் பிடித்தம் போக மீதித் தொகையை திரும்பப் பெற முடியும் என ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளதால் விசைத்தறியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செய்தித்தொடர்பாளர் பா.கந்தவேல் கூறியதாவது: ஜவுளி சார்ந்த தொழிலுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை 18 சதவீதமாகவும், நவம்பர் 1ஆம் தேதி முதல் 2018 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை 12 சதவீதமாகவும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது.

விசைத்தறியாளர்கள் செலுத்தும் ஜிஎஸ்டியில் 5 சதவீதம் (துணி விற்பனைக்கான வரி) மட்டும் பிடித்தம் செய்து மீதமுள்ள தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அதன்படி 18 சதவீத ஜிஎஸ்டியின்போது 13 சதவீதமும், 12 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டபின் 7 சதவீதமும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.   ஆனால் 2017-18ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரியில் பிடித்தம் போக மீதம் உள்ள தொகை திரும்ப அளிக்கப்படவில்லை. இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் இருந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி கடிதம் வந்தது. அதில் 2018-19ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரியில் பிடித்தம்போக மீதம் உள்ள தொகையைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் 2017-18 இல் ஜிஎஸ்டி கணக்கில் கடந்த 20-9-2018 தேதியில் பூஜ்ஜியம் என இருக்க வேண்டும்.

பூஜ்ஜியம் கணக்கு இல்லாதவர்கள் 21-9-2018 முதல் தற்போது வரை 2017-18ஆம் ஆண்டு கணக்கில் உள்ள பணத்துக்கு 18 சதவீத வட்டி கட்ட வேண்டும்.  அவ்வாறு வட்டியை கட்டினால் மட்டுமே 2018-19 ஆம் ஆண்டுக்கான கணக்கு பூஜ்ஜிய நிலைக்கு கொண்டுவரப்பட்டு ஜிஎஸ்டியில் பிடித்தம் போக உள்ள மீதித் தொகையைத் திரும்ப பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி 2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2018 ஜூலை வரையிலான ஓராண்டுக்குத் திரும்ப வழங்க வேண்டிய ஜிஎஸ்டி பணத்தைக் கேட்கமாட்டோம் என ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எழுதிக்கொடுத்துவிட்டு திரும்பப் பெறும் தொகைக்கு 18 சதவீத வட்டியை செலுத்திய விசைத்தறியாளர்களுக்கு 2018-2019 ஆம் ஆண்டுக்கு ஜிஎஸ்டி திரும்பப்பெறும் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை 10 சதவீதம் அளவுக்கே உள்ளது.  எங்கள் பணத்தை ஜிஎஸ்டி கவுன்சில் வைத்துக்கொண்டு அதற்கு வட்டியும் கேட்கிறதே என அதிகாரிகளிடம் கேட்டால், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட ஓராண்டு காலத்தில் விசைத்தறியாளர்கள் முழுமையான சான்றுகளை (கொள்முதல் ஆவணங்கள்) தாக்கல் செய்யவில்லை என்று கூறுகின்றனர். அதற்கு அபராதமாகத்தான் இந்த 18 சதவீத வட்டி என்கின்றனர்.   எங்களுக்கு சேர வேண்டிய பணத்தைக் கொடுக்காமல், வட்டியும் கட்ட வேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயமான முடிவாக இருக்க முடியும்? இப்பிரச்னையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அறிகிறோம்.

அதுகுறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். எங்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கவில்லையெனில் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com