
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட வியாழக்கிழமை தேர்தல் அலுவலர் பஞ்சவர்ணத்திடம் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் . உடன் திமுக துணை பொதுச்செயலர் ஐ.பெரியசாமி, மாவட்டச்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தொடங்கியது. திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணத்திடம், திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் திமுக துணைப் பொதுச்செயலர் ஐ.பெரியசாமி, திமுக தெற்கு மாவட்டச் செயலர் மு.மணிமாறன், காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவர் ஜெயராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் இன்குலாப் ஆகியோர் உடனிந்தனர். மருத்துவர் சரவணனுக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்.
மருத்துவர் சரவணனுக்கு ரூ.4 கோடியே 22 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களும், ரூ. 3 கோடியே 7 லட்சத்து 54 ஆயிரத்து 585 மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளன. அவரது மனைவி கனிமொழிக்கு ரூ. 2 கோடியே 90 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களும், ரூ.1 கோடியே 70 லட்சத்து 16 ஆயிரத்து 135 மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் உள்ளன.
முன்னதாக திமுக துணை பொதுச் செயலர் ஐ.பெரியசாமி தலைமையில் திமுக மாவட்டச் செயலர்கள் பி.மூர்த்தி, மு.மணிமாறன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் திருநகர் 3 ஆவது பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் வந்தனர்.